கைக்குழந்தைகள், முதியோர்கள், உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் அனைவரும் போராளிகளா? இவர்களை போராளிகள் என்று கூற எப்படி மனம் வந்தது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த நாளை இன, மத, மொழி, கட்சி என எந்த பேதமும் இன்றி அனைவரும் சேர்ந்து நினைவுகூரப்பட வேண்டும்.

இன்றைய நாளில் அதாவது 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி உயிரிழந்த உறவுகளுக்கு எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கைக்குழந்தைகள், முதியோர்கள், உடல் உறுப்புக்களை இழந்தவர்களை போராளிகள் என்று கூற இவர்களுக்கு எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவுநாள் என்பது தமிழர்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும் நாள்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஆட்சி மாறியது. அந்த மாற்றத்திற்கு நாமும் முக்கிய காரணம்.

ஆனால் கடந்த மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு நாளை கடும் பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே முன்னெடுத்தோம்.

அப்போது முல்லைத்தீவில் 1500 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அமைந்தது.

இதைப் பார்க்கும் போது முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகவே நான் கருதுகின்றேன்.

ஆகவே இந்த நாள் எம் அனைவரையும் ஒன்றிணைக்கும் நாளாக மாற வேண்டும் எனவும் மேலும் பல விடயங்களையும் முதலமைச்சர் தெரிவித்தார்.