நீர்கொழும்பில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் அந்த சிகரெட்டால் உடல் கருகி பலியாகியுள்ளார்.

புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டினால் மெத்தையில் தீப்பற்றிக் கொண்டுள்ளதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் 59 வயதான பெற்றிக் வர்னசூரிய என்ற நபர் கடுமையான புகைப்பழக்கம் உடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் படுக்கைக்கு சென்ற பின்னரும் சிகரெட் புகைப்பதனை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை நித்திரையிலிருந்து எழுந்து சிகரெட் ஒன்றை புகைத்துள்ளார். சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த போது அவரை அறியாமல் மீளவும் நித்திரையாகிவிட்டார்.

இதன் போது கையில் இருந்த சிகரெட்டின் தீ தலையணை மற்றும் மெத்தையில் பரவிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்தினால் உடலை அடையாளம் காண முடியாத அளவிற்கு இந்த நபர் சாம்பலாகியுள்ளார்.

மேலும், நீர்கொழும்பு பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.