நாடு முழுவதும் வான் மற்றும் தரை மார்க்கமாக இலவச அம்பியூலன்ஸ் சேவையை நடத்த முதலீடுகளை மேற்கொள்ள ஜெர்மனியின் உலக புகழ்பெற்ற பென்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.

ஜெர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன, பென்ஸ் நிறுவனம், ஜெர்மனிய அரச பொருளாதார நடவடிக்கைகளுக்காக நிதி ஆதாரங்களை வழங்கும் வங்கியின் பிரதிநிதிகள், ஜெர்மனிய அரச அதிகாரிகளை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இயற்கை அனர்த்தம், அவசரமான நிலைமைகளில் நோயாளிகளை அழைத்துச் செல்ல ஜெர்மனியின் எயார் பஸ் நிறுவனம் 24 உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்ய முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் இலவச அம்பியூலன்ஸ் சேவையை நடத்த ஆயிரத்து 50 வண்டிகளையும் அவசர அனர்த்தங்களின் போது பயன்படுத்த 240 வண்டிகளை வழங்கவும் பென்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் மூலம் இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச அம்பியூலன்ஸ் சேவை மூலம் மக்களுக்கு சிறப்பான சேவை கிடைத்து வருகிறது.

இதே விதமாக மக்களுக்கு இலவச அம்பியூலன்ஸ் சேவையை வழங்க ஜெர்மனி வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

குறைந்த வட்டி வீதத்தின் கீழ் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் துரிதமாக இந்த திட்டத்தினை ஆரம்பிக்க உள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.