தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் ஈரான் எல்லைப் பகுதியில் வைத்து சுட்டுக் கொலை செய்யய்பட்டுள்ளதாக கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஈரானுக்குள் பிரவேசிக்க முயற்சித்த முன்னாள் புலிச் செயற்பாட்டாளரான பேரம்பலன் மல்தியாளன் மற்றும் விஜயகுமார் பிரசான் ஆகிய இருவருமே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள சட்டவிரோத ஆட்கடத்தல்காரர் ஒருவருக்கு பணம் வழங்கி, பிரிட்டனுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளனர்.

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் ஈரானிய எல்லையின் ஊடாக ஐரோப்பா செல்ல முயற்சித்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறித்த கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் எப்போது இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சோ அல்லது அரசாங்கமோ இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ விபரங்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.