பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு போனபோது எங்களை உள்ளுக்குள் எடுக்க மறுத்து விட்டார். அதன் காரணமாக கொண்டு சென்ற மகஜரை வீதியில் நின்று ஆர்ப்பாட்டம் செய்து கிழித்தெறிந்து விட்டு வீடு திரும்பினோம் என அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி த.செல்வராணி தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் நிகழ்வு நேற்று காரைதீவு கடற்கரை காளி கோயில் அருகாமையில் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய செல்வராணி,

2009 இறுதி யுத்தத்தில் எமது கைகளால் ஒப்படைக்கப்பட்ட போராளிகள் இன்னும் இருக்கின்றார்கள். அதனை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். காணாமல் ஆக்கப்பட்வர்களது உறவினர்கள் படும் துன்பநிலை யாருக்கும் தெரியாது. பாதிக்கப்பட்ட எங்களுக்குத்தான் தெரியும்.

பாதிக்கப்ட்ட ஒவ்வொரு குடும்பமும் இன்று படும் துன்ப நிலை யாருக்கும் தெரியாது. காணாமல் ஆக்கப்ட்ட எங்களுக்கு இந்த அரசாங்கத்தினால் எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை என்பதுடன் எமது உறவுகளின் நிலைபற்றியும் எந்தவிதமான நல்ல தீர்வினையும் தர மறுககின்றார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் எங்களை திரும்பிப்பார்க்கக்கூட முடியாத நிலையிலே இருந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றைக்கு முன்தினம் கொழும்பிற்குச்சென்று காணாமல் ஆக்கப்படடோர் தொடர்பான மகஜரை த.தே.கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சம்பந்தன் ஐயா, சுமத்திரன் ஜனாதிபதி, மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து மகஜரை கையளித்திருந்தோம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு போனபோது எங்களை உள்ளுக்குள் எடுக்க மறுத்து விட்டார். அதன் காரணமாக கொண்டு சென்ற மகஜரை வீதியில் நின்று ஆர்ப்பாட்டம் செய்து கிழித்தெறிந்து விட்டு வீடு திரும்பினோம்.

சிறுபான்மை இனமாகிய நாங்கள் போட்ட வாக்கில் கதிரையை பிடித்து விட்டு எங்களை வீதியில் தள்ளிவிட்டிருக்கின்றார்கள் வாக்கு கேட்டு வந்தபோது எங்களது கை, கால்களை பிடித்து உங்களது உறவுகளை கண்டறிந்து தருவோம் என்று கைகூப்பினர்கள். ஆனால் இன்று எங்களை வீதிக்கு விரட்டுகின்றார்கள். எங்களது உறவுகள் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

எங்களது உறவுகளை தேடி அலைந்து திரிவது போன்று இந்த நாட்டில் எவரும் இனிமேல் தங்களது உறவுகளை தேடி அலையக்கூடாது. காணாமல் ஆக்கப்பட்டோர் என்ற ஒரு நிலை இனிமேல் வரக்கூடாது. எங்களது உறவுகளை தேடி கண்டறியும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

இந்நிகழ்வினை காரைதீவு தமிழ் அரசுக் கட்சியின் பற்றாளர்களும், அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களும் இணைந்து நடாத்தினார்கள்.

இதில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன், அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் தலைவி த.செல்வராணி மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.