மட்டக்களப்பு வாவியின் வரைபடத்தில் மாற்றம்: கோவிந்தன் கருணாகரம்

காத்தான்குடியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் வகையில் இடமொன்றை வழங்குது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற தயாராகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது, காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வாவிப்பகுதியிலும் குப்பைகள் கொட்டப்படுவதனால் பல்வேறு சூழல் பாதிப்புகள் எதிர்கொள்ளப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜாவினால் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா,

எல்லைப்பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் காத்தான்குடியில் வாவிக்கரை பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு மண் போடப்படுகின்றது.

இது தொடர்ச்சியாக செய்யப்படுவதன் காரணமாக குப்பைகளில் உள்ள நச்சு பொருட்கள் நீரில் கலப்பதனால் வாவி அசுத்தம் அடைவதுடன் மீனவர்கள் பாதிப்புகளை எதிர்கொள்வதோடு, குறித்த பகுதியில் பிடிக்கப்படும் மீனை உண்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

ஏறாவூர்ப்பற்று, கொடுவாமடு பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கான இடம் உருவாக்கப்பட்டுள்ளதனால் காத்தான்குடியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அங்கு கொண்டு செல்லமுடியும் என கூறியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்,

எல்லைப் பகுதியில் ஒரு சிலர் இவ்வாறு குப்பைகள் கொட்டுவது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

கொடுவாமடு குப்பைகள் கொட்டும் இடத்தில் அனைத்து குப்பைகளையும் கொட்ட முடியாது. குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட வேண்டும்.

காத்தான்குடியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிப்பதற்கோ, கொட்டுவதற்கோ இடம் வழங்கப்படாமல் பல காலமாக இது பேசப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் நாங்கள் பல காலமாக சுட்டிக்காட்டி வருகின்றோம். காத்தான்குடியில் அதற்கான இடவசதியில்லாத காரணத்தினால் வேறு இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு இடம்வழங்குமாறு நாங்கள் கோரிக்கைகள் விடுத்து வருகின்ற போதிலும் அதற்கு சாதகமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த குப்பை தொடர்பான பிரச்சினையை வெறும் காத்தான்குடி பிரச்சினையாகவும் ஒரு இனத்தின் பிரச்சினையாகவும் பார்க்க வேண்டாம்.

காத்தான்குடியில் குப்பைகள் கொட்டப்படுவதனால் அதன் பாதிப்பு ஆரையம்பதிக்கும் இருக்கும், நாவற்குடாவுக்கும் இருக்கும். இதனை ஒரு சமூக பிரச்சினையாக பார்க்க வேண்டும்.

கொடுவாமடு பகுதிக்கு குப்பைகள் கொண்டு செல்லப்படும்போது அங்கு குப்பைகள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அவற்றினை கொட்டி தரம் பிரிப்பதற்கு இடமில்லை. அதற்கு ஒரு ஐந்து ஏக்கர் காணி வழங்கும்படி கூறியபோது அதற்கு ஆதரவாக யாரும் குரல் தரவில்லையென சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,

சிப்லி பாரூக்கின் கருத்தினை ஏற்றுக்கொள்கிறேன். காத்தான்குடி குப்பைகளை கொட்டுவதற்கு இடம் வழங்கப்படும் போது காத்தான்குடி வாவிக்கரையில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை சிப்லி பாரூக் எடுக்கவேண்டும்.

மட்டக்களப்பு வாவியின் வரைபடம் மாறியுள்ளது. குப்பைகள் கொட்டப்பட்டு வாவி நிரப்பப்படுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் ஆபத்தினை எதிர்கொள்ளும் நிலைமையேற்படும்.

எனவே காத்தான்குடி குப்பைகளை கொட்டுவதற்கான இடம் தொடர்பில் எதிர்வரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு கொண்டு வந்து அதற்கான இடத்தினை ஒதுக்கித்தர தயாராக இருப்பதுடன், காத்தான்குடி வாவியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்த மாகாணசபை உறுப்பினர் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அது பிரதேச சபையின் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதுடன், அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here