இலங்கை கடற்படையினருடன் களத்தில் இறங்கியது இந்தியக் கடற்படை!

வெள்ள மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் இந்தியக் கடற்படையினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இலங்கையின் தென்மாகாணம் உட்பட 12 மாவட்டங்களில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையினால் இம்மாவட்டங்கள் நீரில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், 120 இற்கும் அதிகமான மக்கள் பலியாகினர்.

இதுவரை வெளியான தகவல்களின் படி ஆறு லட்சம் மக்கள் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் இலங்கை முப்படையினரும் களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மேலதிகமாக இந்திய அரசாங்கம் உடனடியாக நிவாரணக் கப்பலை அனுப்பியிருந்தது. அந்தக் கப்பல் இன்று காலை கொழும்பை அடைந்தது. முதற்கட்டமாக அவசர மருத்துவ உதவிகள் கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் தான், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மீட்பு மற்றும் மருத்துவ உதவிப் பணிகளில் இந்தியக் கடற்படையும் ஈடுபட்டுள்ளது.

இந்தக் கப்பலில் வந்த இந்தியக் கடற்படையின் மீட்புக் குழுக்கள், காமினி வகை மிதவைப் படகுகளுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதனையடுத்து இலங்கை மற்றும் இந்தியக் கடற்படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்தியுள்ளனர்.

இன்றைய தினமும் பல இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டமையினால் அந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் இடம்பெயர நேர்ந்துள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் இருந்து இலங்கை சென்றுள்ள மருத்துவக் குழுவினர் முகாம் அமைத்து மருத்துவ சேவையினை வழங்கி வருகின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here