அரசியலில் நேர்மையை கடைப்பிடித்தவர் அப்பாத்துரை: சம்பந்தன் இரங்கல்

அரசியலில் நேர்மையும், அனைவரையும் அரவணைத்துச் செயற்படும் உயரிய பண்பும் கொண்டு விளங்கிய அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் இழப்பு, தமிழ் மக்களுக்கும் அவர் சார்ந்திருந்த தமது கட்சிக்கும் பேரிழப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, உடல்நலக் குறைவால் தமது 84 ஆவது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரதிநிதிகள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

”1933ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், வரணியில் பிறந்த அமரர் விநாயகமூர்த்தி அவர்கள் இளவயது முதலே சமூகப்பணிகளில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்ததுடன் சமயப் பணிகளிலும் பெரும்பங்காற்றி வந்தார். ஆரம்பத்தில் அரசாங்க சேவையில் பணியாற்றிய அன்னார், சட்டக்கல்வியைப் பயின்று சட்டத்தரணி எனத் தகுதி பெற்றதும் சட்டத்தொழிலை மேற்கொண்டார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டபோது, அவர்களுக்கெதிரான வழக்குகளில் அவர்கள் சார்பாக செயற்பட்டு அவர்களின் விடுதலைக்கான முயற்சிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்தார்.

இளவயது முதலே அரசியல் ஈடுபாடு கொண்டிருந்த அவர் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட அன்னார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானதன் பின்னர், 2001ஆம் ஆண்டு மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் தான் சார்ந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் கொள்கைகளுக்கு விசுவாசமாகச் செயற்பட்டதுடன், மக்களுக்குத் தன்னாலான பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டார்.

விநாயகமூர்த்தி அவர்களது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கும் எனது சார்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here