ஆபத்தான பகுதியில் மைத்திரி!

இலங்கையில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றம் காரணமாக தென் மாகாணம் முழுமையாக செயலிழந்துள்ளது.

தென் மாகாணத்தின் ஏழு மாவட்டங்கள் அனர்த்த வலயங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மண்சரிவு ஆபாயம் அடுத்த 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேரனர்த்தங்களின் நிலைமைகளை நேரில் ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்தினபுரிக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

அங்கு சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட மக்களுக்காக தேவையான நிவாரண வேலைத்திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் ஆராய்ந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகளின் ஒவ்வொரு துறை பற்றியும் ஜனாதிபதி தனித்தனியாக கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான உயர்ந்தபட்ச நடவடிக்கையை எடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். மேலதிக நிதி தேவைப்படுமாயின், உடனடியாக அறிவிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

படகுகள் மூலம் சென்றடைய முடியாத உயர் ஆபத்து காணப்படும் பிரதேசங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கான விசேட வேலைத்திட்டத்தையும் மேற்கொள்வது அவசியமாகும்.

முகாம்களில் வாழும் மக்களுக்கு தேவையான உணவுகள், மருந்து வகைகள், ஆடைகள் என்பனவற்றை கேட்டறிந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றியும் அவர் கேட்டறிந்தார். சேதமடைந்த வீடுகளை பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்போடு மறுசீரமைக்குமாறு அவர் உத்தரவிட்டார்.

நீர் வடிந்ததும், குடிநீர் கிணறுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் ஜனாதிபதி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பல நாடுகள் முன்வந்துள்ளன.

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் ஜனாதிபதி உறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here