கடற்றொழிலாளர்களை பட்டினி சாவுக்குள் தள்ளாதீர்கள்! பருத்தித்துறை

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து துறைமுகம் அமைக்க வேண்டிய தேவை என்ன.? அப்படியான துறைமுகம் எமக்கு தேவையில்லை என பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் வ.அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பருத்தித்துறை கடற்றொழிலாளர்களை பட்டினி சாவுக்குள் தள்ளாதீர்கள் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பருத்தித்துறை துறைமுகம் பாரியளவில் புனரமைப்பு செய்யப்படவுள்ள நிலையில், இத்துறைமுகம் புனரமைப்புக்காக பருத்தித்துறை கொட்டடி மற்றும் முனை ஆகிய கிராமங்களை முழுமையாக கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து நேற்றைய தினம் கொட்டடி மற்றும் முனை பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர்.

இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முனை கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் அருள்தாஸ் மேற்க ண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மத்திய கடற்றொழில் அமைச்சு மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து, பருத்தித்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளன.

இதற்காக மக்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு இடம் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் துறைமுக அபிவிருத்தி திணைக்களத்தினர் வருகைத்தந்து பருத்தித்துறை – கொட்டடி மற்றும் முனை கிராமங்களை துறைமுக அபிவிருத்திக்காக முழுமையாக கையகப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கின்றனர்.

ஆகவே முன்னர் எம்மோடு கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட தீர்மானத்தை விட்டு புதிதாக எமது கிராமங்களையும் உள்ளடக்கி பருத்தித்துறை துறைமுகத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.

கொட்டடி மற்றும் முனை ஆகிய கிராமங்கள் பல ஆயிரக்கணக்கான மக்களுடைய வாழ்வாதாரத்திற்கான பகுதிகளாகும்.

எனவே எமது கடற்றொழிலாளர்களை பட்டினி சாவுக்குள் தள்ளி அவர்களுக்கு ஒரு துறைமுகத்தை அமைக்க வேண்டிய தேவை ஒருபோதும் கிடையாது.

துறைமுகம் அபிவிருத்திக்காக முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். காரணம் அந்த தீர்மானங்கள் எங்களுடன் பேசி எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

ஆனால் எங்களுடன் பேசாமல் புதிதாக ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து அதனை நடைமுறைப்படுத்த நினைப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

அவ்வாறான ஒருநடவடிக்க க்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here