தமிழினப் படுகொலையை நினைவுகூருவது தவறா? வேல்முருகன் கண்டனம்

இனப்படுகொலைக்குள்ளான தமிழீழ மக்களை நினைவுகூருவதை வன்முறைச் செயல் போல் சித்தரிக்க முயல்வது, மோடி அரசின் எடுபிடியாகத் தமிழக அரசு மாறிவிட்டதையே காட்டுகிறது. மோடி அரசின் ஆசையையே எடப்பாடி அரசு நிறைவேற்றியிருக்கிறதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டுகிறது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆண்டு தோறும் சென்னை மெரினா கடற்கரையில் மே 17 இயக்கம் சார்பில் இலங்கை இனப்படுகொலை நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு கடந்த 21ந் தேதி ஞாயிறன்று நடத்த இருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி அரசு தடை விதித்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை தடையின்றி நடந்து வந்த இந்த நிகழ்ச்சிக்கு, ஜெயலலிதாவின் ஆட்சியையே தொடர்வதாகச் சொல்லும் எடப்பாடி அரசு தடை விதிக்கக் காரணமென்ன?நடுவண் மோடி அரசின் தூண்டுதலால்தான் எடப்பாடி தடை விதித்தார் என்பது வெட்டவெளிச்சமானது.

இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்ச்சி நீர்நிலைகளின் கரையில்தான் உலகெங்கும் காலகாலமாக நடந்து வருகிறது. அதற்கு உலகில் எந்த நாட்டிலும் தடை இருப்பதில்லை.அந்த வகையில் வழக்கம்போல் அன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் என் தலைமையில் அமைதிப் பேரணியாகச் சென்று நினைவேந்தலில் கலந்துகொண்டோம்.அன்று இரவு சிவகங்கை மாவட்டம், காலையார்கோவிலிலும் இதே நினைவேந்தல் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ள வேண்டி இருந்ததால் நான் உடனடியாக கிளம்பிச் சென்றுவிட்டேன்.

அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை போலீஸ் கைது செய்தது. பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, காஞ்சி மக்கள் மன்றத்தை சேர்ந்த தஞ்சை தமிழன் ,தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன், தோழர்கள் இளமாறன், அருண் உள்ளிட்ட 17 பேர் மீது பொய் வழக்குப் போட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

எடப்பாடி அரசு இப்படி நடந்துகொள்வதா என்று மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இன்று 29.05.2017ல் அவர்களது நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண் ஆகிய நால்வர் மீதும் குண்டர் சட்டத்தைப் பாய்ச்சி மீண்டும் தளைப்படுத்தியுள்ளனர்.

எடப்பாடி அரசின் இந்தக் கொடுஞ்செயல் தமிழக மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. திருமுருகன் காந்தியோ அல்லது மற்ற மூவருமோ இதுவரை வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாக அவர்கல் மேல் எந்த வழக்கும் கிடையாது. அப்படியிருக்க அவர்கள் மேல் மீது குண்டர் சட்டத்தை ஏவியிருப்பது, எடப்பாடி அரசின் வஞ்சக நோக்கத்தையே காட்டுகிறது.

இனப்படுகொலைக்குள்ளான தமிழீழ மக்களை நினைவுகூருவதை வன்முறைச் செயல் போல் சித்தரிக்க முயல்வது, மோடி அரசின் எடுபிடியாகத் தமிழக அரசு மாறிவிட்டதையே காட்டுகிறது. மோடி அரசின் ஆசையையே எடப்பாடி அரசு நிறைவேற்றியிருக்கிறதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டுகிறது.

உடனடியாக தோழர் திருமுருகன் உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்து, அவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்; அமைதியான முறையில் போராடுவோர் மீது அடக்குமுறைகளை ஏவும் எதேச்சாதிகாரப் போக்கை எடப்பாடி அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here