பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்படாமைக்கு வடமாகாண முதலமைச்சரா காரணம்?

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஊடகவியலாளர்களுக்கான ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடக முதலாளிகள் இருந்த மேசையில் என்னையும் கொண்டு சென்று அமர வைத்தார்கள்.

அந்தச் சந்திப்பில் உரையாடப்பட்ட பிரதான விடயங்களிலொன்று வடமாகாண முதலமைச்சர் பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதாகும்.

அப்போது முதலமைச்சரால் தான் பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்படவில்லையா? முதலமைச்சர் சம்மதித்தால் அரசாங்கம் உங்களுக்குத் தந்திடுமோ?, சம்பந்தன் சம்மதம் தெரிவித்தால் சம்பூரை அரசாங்கம் உங்களுக்கு வழங்கிடுமோ? என யாழ். இந்தியத் துணைத் தூதுவரைப் பார்த்துக் கேட்டேன்.

ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள்? என அவர் என்னைப் பார்த்துக் கேட்டார். முதலமைச்சர் சொல்லித் தான் பாலாலியை விஸ்தரிப்பதற்கு இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றால் முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் எத்தனை கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்திடம் முன்வைக்கிறார்?

அதில் எத்தனை கோரிக்கைகளை அரசாங்கம் செயற்படுத்துகிறது என நோக்கினால் அதற்கான விடை ஒன்றுமில்லை என்பதேயாகும் என சமூக ஆய்வாளர் ம.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் ‘சிங்கள பெளத்தத் தலைமைகளின் இராஜதந்திரத்தை வெற்றி கொள்ளும் திறன் தமிழ்த் தலைமைகளுக்கு உண்டா’ எனும் தலைப்பிலான கருத்துரையும் கலந்துரையாடலும் நேற்று யாழ் .குப்பிளான் அறிவொளி சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் என்.இன்பம் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கின் படைத்துறை இதயத்தின் கேந்திர நிலையமாகப் பலாலி காணப்படுகிறது. இந்நிலையில் பலாலியை ஒரு பொதுப் போக்குவரத்திற்காகத் திறந்து விட்டால் இராணுவமய நீக்கம் நிகழும்.

ஆதலால், பலாலியை இராணுவமய நீக்கம் செய்வதால் பாதுகாப்புக் கெடுபிடி தளரும். இதனால், ஆபத்துக்கள் ஏற்படும் என்பதால் பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்படுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.

பலாலி விமான நிலையில் விஸ்தரிக்கப்பட்டால் தற்போது கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக வடக்கு மாகாணத்திற்கு வருகை தரும் பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தைத் தவிர்த்து விட்டுச் சென்னையில் மீனம்பாக்கத்தில் இறங்கி செழிப்பான ஷொப்பிங்கையும் செய்து கொண்டு அப்படியே பலாலியில் வந்திறங்குவார்கள்.

தமிழகத்திற்கும், ஈழத்தமிழர்களுக்குமிடையிலான வான்வெளிப் பொருளாதார உறவு துலக்கமான வகையில் விருத்தியாகும். ஏற்கனவே அந்த உறவு பண்டைய காலங்களில் கடல் வழியாக இருந்து வந்துள்ளது.

பண்டைய காலங்களில் வடமராட்சியில் அமைந்திருந்த துறைமுகங்களூடாக ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத்திற்குமிடையில் மிகப் பலமானதொரு பரிவர்த்தனை இருந்தது.

பின்னர் போராட்டக் காலங்களில் இந்தப் பரிவர்த்தனை வெவ்வேறு வடிவங்களில் காணப்பட்டது. எனவே, அந்தப் பரிவர்த்தனை உத்தியோகபூர்வமான வழிகளுடாகவே வளரும்.

அதனை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இதனால் தான் பலாலியை விஸ்தரிப்பதற்குத் தமிழ்த் தலைமை சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதனை ஒரு சாட்டாகச் சொல்கிறார்கள்.

அவ்வாறு சொல்வதன் ஊடாகத் தமிழ்த் தலைமைகளுக்கும், தமிழ் மக்களுக்குமிடையில் ஒரு முரண்பாட்டை மூட்டிவிடவும் முயற்சிக்கலாம்.

திருகோணமலையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் போது பலாலி விமானத்தளத்தை இந்தியாவின் உதவியுடன் விஸ்தரிப்பதற்கு ஒத்துழைப்பதென முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், விஸ்தரிப்பதற்கெனப் பொதுமக்களின் மேலதிக காணிகள் சுவீகரிக்கக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை வடக்கு மாகாண சபை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

வடமாகாண சபை உறுப்பினரொருவரை இதற்கான தீர்மானத்தை வரையுமாறு வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அவர் அந்தத் தீர்மானத்தை வரைவதற்கு முன்னர் வேறொரு பொறுப்பிலிருந்த ஒருவர் தான் அந்தத் தீர்மானத்தை வரையவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் அந்த வரைபை வடக்கு மாகாண சபையில் வாக்கெடுப்பிற்கு விடுவதற்குத் தீர்மானித்திருந்த சூழலில் அன்றைய தினம் வடமாகாணப் பட்டதாரிகள் வடமாகாண சபை முன்பாக நடாத்திய முற்றுகைப் போராட்டம் மூலம் அந்த வழியை அடைத்து விட்டனர்.

இதன் காரணமாக வடமாகாண முதலமைச்சர் அன்றைய தினம் சபை அமர்வில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இதனால், முதலமைச்சர் இல்லாமலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது.

ஆனால், இது தற்செயலாக நடந்த செயற்பாடு. குறித்த தீர்மானத்திலுள்ள விடயங்கள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காகக் தீர்மானத்தின் நகலை பார்வையிடுவதற்கு நான் மேற்கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை.

அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அண்மையில் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

ஆனால், யாரை வைத்து விஸ்தரிப்பது என்பது தொடர்பில் நாங்கள் பின்னர் முடிவெடுப்போம் என்று கூறியிருந்தார். இதன் மூலம் அவர் வடக்கு மாகாண சபைக்கு ஒரு தெளிவான செய்தியைச் சொல்லியுள்ளார்.

பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தால் இந்தியாவின் ஒத்துழைப்புக் கோரப்படவுள்ளதாக ஏற்கனவே பரவலாகச் செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு செல்லுபடியாகியுள்ளது. இது தான் ரணில் விக்கிரமசிங்கவின் இராஜதந்திர நுணுக்கம்.

ரணில் விக்கிரமசிங்க ஒரு நரியர் என்று கூறிக் கொண்டு அதனை எழுதிச் சந்தோசப்படுவதால் மாத்திரம் இராஜதந்திரப் போர் இடம்பெறாது. தமிழர்களும் நரிகளாக மாற வேண்டும்.

அதற்கேற்றால் போல் எம்மவர்களும் தந்திரங்களைப் பயில வேண்டும். அதற்கேற்ற துறைகளில் எங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளைப் பயிற்றுவிக்க வேண்டும்.

தமிழர் அரசியலை ஆகக் கூடிய பட்சமாக அறிவுபூர்வமாக அணுகுங்கள். இறந்த காலத்தைப் பரிசோதியுங்கள். எங்கே தவறு நடந்தது என்று கண்டுபிடியுங்கள்.

அந்த தவறு இனியும் நடக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும் எனச் சிந்தியுங்கள் எனவும் தமிழ்மக்கள் அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார்.

கருத்துரைக்கு முன்னதாகக் கடந்தகால யுத்தத்தால் உயிரிழந்த பொதுமக்களுக்கும், மாவீரர்களுக்கும், தென்னிலங்கையில் வெள்ள அனர்த்தத்தால் உயிரிழந்த மக்களுக்கும் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கருத்துரையைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரபல அரசியல் ஆய்வாளர் சி. அ.யோதிலிங்கம், வலிகாமம் மீள்குடியேற்றக் குழுவின் தலைவரும், வலி. வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான ச.சஜீவன், எழுத்தாளர்கள், இளைஞர்-யுவதிகள், அரசியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here