களனி ஆற்றின் நீரேந்துப்பகுதிகளில் கடும் மழை!

களனி ஆற்றின் நீரேந்துப் பகுதிகளில் இன்று காலை வரை கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனர்த்த நிலையை கருத்திற் கொண்டு நீர்ப்பாசனத் திணைக்களம் நாளாந்த வெள்ள அபாயம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகின்றது.

குறித்த அறிக்கைத் தொடரின் இன்றைய அறிக்கையில் களனி ஆற்றின் நீரேந்துப் பகுதிகளின் மழைவீழ்ச்சி தொடர்பான புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் இன்று காலை ஆறரை மணியளவில் முடிவுற்ற 21 மணிநேர காலத்தினுள் தெரணியகலை பிரதேசத்தில் 65.5 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

களனி ஆறு உற்பத்தியாகும் பிரதேசத்தை அண்மித்த நோர்வூட்டில் 57.7 மில்லிமீட்டர் மற்றும் ஆற்றின் வழிப்பாதையில் அமைந்துள்ள கிதுல்கலை பிரதேசத்தில் 53.3 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

களனியாற்றுக்கு நீர் வழிந்தோடும் ஒருசில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையான மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இருந்தபோதிலும் களனி ஆற்றில் இதுவரை வெள்ள அதிகரிப்பு அபாயம் ஏற்படவில்லை. எனினும் இன்றும் நாளையும் தொடர்ந்தும் மழை பெய்யும் பட்சத்தில் களனி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்படலாம் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here