காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கண்ணீருக்கு என்ன பதில்?

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கண்ணீருக்கு என்ன பதில்?

–    சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளைத் தேடித் தருமாறு கேட்டு கிளிநொச்சியில் ஆரம்பித்த போராட்டம்  தீர்வேதுமில்லாத நிலையிலே 100 ஆவது நாளை எட்டியிருக்கிறது. தங்களுடைய நியாயமான பிரச்சினைக்கு நிச்சயமாக ஒரு தீர்வு கிட்டும். காணாமலாக்கப்பட்ட தங்களின் உறவுகளைப் பற்றிய சேதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இந்தப் போராட்டத்தை இந்த மக்கள் ஆரம்பித்திருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கை இந்த 100 களிலும் வெற்றியடையவில்லை. இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே பாதிக்கப்பட்டுத் துயரினால் வருந்திக் கொண்டிருந்த மக்கள், தாங்கள் நடத்திய இந்த நீண்ட போராட்டத்துக்குச் சாதகமான பதில் கிட்டவில்லை என்பது இரட்டைப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மக்களின் நிலைமையைக் கருத்திற் கொண்டு, இனியும் காலதாமதங்களைச் செய்யாமல் உடனடியாக உரிய தீர்வினை முன்வைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தெரிவிக்கின்றது.

தற்போதைய ஆட்சியானது மிகக்கூடுதலான ஜனநாயக அடித்தளத்தைக் கொண்டது எனவும் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறையுள்ளது என்றும் கூறப்படுவதைக் கருத்திற் கொண்டே, இந்த நெடிய போராட்டத்தை நம்பிக்கையோடு இந்த மக்கள் நடத்தி வருகின்றனர். தீர்வு கிட்டும் என்று எதிர்பார்த்திருக்கும் மக்களுக்குக் குறைந்த பட்சம், நம்பிக்கை அளிக்கக்கூடிய ஆரம்பகட்ட நடவடிக்கைகளையாவது  அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும். அதற்கான அழுத்தங்களை பாராளுமன்றத்திலும் வெளிச்சூழலிலும் ஏற்படுத்தியிருக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கான ஆதரவை அளித்துவரும் சக்திகளுக்குண்டு. இந்தச் சக்திகள் முறையாகச் செயற்பட்டிருக்குமானால், இன்று இந்த மக்கள் 100 நாட்களைக் கடந்தும் எத்தகைய தீர்வும் இல்லாத நிலையில் இந்தத் தகரக் கொட்டகையினுள் மழையிலும் வெயிலிலும் சோர்ந்திருக்க வேண்டியிருந்திருக்காது. குறைந்தபட்சம் இந்த மக்களை ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்தித்துப் பேசுவதற்கான ஏற்பாட்டையாவது இந்தச் சக்திகள்  செய்திருக்க வேணும். அதற்கான தார்மீகப் பொறுப்பு இவற்றுக்குண்டு.

தனிப்பட்ட ரீதியிலான அரசியல் தேவைகளுக்காக நேரம் ஒதுக்கி, தங்கள் வீடுகளுக்கு ஜனாதிபதியையும் பிரதமரையும் அழைக்கின்ற அக்கறையை ஏன் இந்த மக்களின்பாற்பட்டு இந்தச் சக்திகள் எடுக்கவில்லை என்பதை இந்த மக்களோடு இணைந்து சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்புக் கேட்கிறது. வலிகளைச் சுமந்து கொண்டிருக்கும் மக்களுக்கு தீர்வே மகத்தான மருந்தாகும். அந்த மக்களைத் தொடர்ந்தும் வலிகளில் துவள விடுவதில்லை. இது பொதுவிதிக்கும் மருத்துவ முறைக்கும் உரியதல்ல.

ஆகவே, இனியும் தாமதங்களை நீட்டிச் செல்லாமல், இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கான முயற்சியை சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும். பிரச்சினைகளை வைத்திருப்பதையும் வளர்ப்பதையும் விட்டு விட்டு, அவற்றைத் தீர்த்துப் புதியதொரு சூழலை உருவாக்குவதற்கு முயற்சிப்போம். இந்த நாடு கண்ணீருடன் வாழ்கின்ற மக்களைக் கொண்டிருக்க வேண்டாம் என்று உறுதிசெய்வோம். உறவுகளை இழப்பதும் உறவுகள் எங்கே என்று தெரியாமல் தவிப்பதும் ஒரு நாட்டிற்கு ஏற்படுகின்ற மிகக் கொடியதொரு நிலையாகும். இதற்குக் காரணமான அரசியல் சூழல் முடிவுக்கு வந்ததைப்போல இந்தப் பிரச்சினையும் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்புக் கேட்கிறது.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளோடு இணைந்து அவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு எமது ஆதரவையும் பங்களிப்பையும் தொடர்ந்தும் நாம் வழங்குதற்கு எப்போதும் தயாராக இருக்கிறோம். கண்ணீரைத் துடைப்பதே மகத்தான அரசியல் பணியாகும் என்ற அடிப்படையில் தொடர்ந்தும் எமது  ஆதரவும் பங்களிப்பும் என்றும் உண்டு. மிகக் கூடிய விரைவில் எல்லோரும் கூடிய மகிழ்ச்சியான ஒரு தருணம் வரும் என்ற நம்பிக்கையோடு இந்தப் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவினை சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு வழங்குகின்றது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here