யாழில் இடம்பெற்ற வாள்வெட்டில் பெண்ணொருவர் உட்பட நால்வர் படுகாயம்

யாழில் இளைஞர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு தாக்குதலில் பெண்ணொருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொக்குவில் – பெற்பதி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு அத்துமீறி புகுந்த இளைஞர் குழுவினாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொக்குவில் – பெற்பதி பகுதியில் ஒன்று கூடும் இளைஞர்கள் சிலர் அந்தப்பகுதியில் அட்டகாசம் செய்வதுடன் சமூகவிரோதச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்துள்ளனர்.

இந்த இளைஞர்களை பெற்பதியைச் சேர்ந்த இளைஞர்கள் கண்டித்துள்ளனர். இதனைடுத்து இரு குழுக்களுக்கிடையிலும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமூகவிரோச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த இளைஞர் குழு தம்மைக் கண்டித்தவர்களின் வீட்டிற்குள் வாள்கள் மற்றும் போத்தல்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்றிரவு அத்துமீறி புகுந்துள்ளது.

வீட்டில் இருந்தவர்களை அவர்கள் வைத்திருந்த வாள்கள் மற்றும் கண்ணாடிப் போத்தல்களால் சரமாரியாகத் தாக்கியதுடன், இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த பெண் ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன், காயமடைந்தவர்கள் அந்த பகுதி மக்களால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை நடத்தியதுடன், குறித்த குழுவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here