கொட்டாஞ்சேனையில் 2 பேரைக் கடத்திய கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியல்

கொட்டாஞ்சேனையில் இரண்டு தமிழ் வாலிபர்களைக் கடத்திக் காணாமல் போகச் செய்த கடற்படை அதிகாரியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் வருடம் கொட்டாஞ்சேனையிலிருந்து வெல்லம்பிட்டி நோக்கி வானில் சென்று கொண்டிருந்த இரண்டு தமிழ் வாலிபர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டிருந்தனர்.

வெலிசறை கடற்படை முகாமின் லெப்டிணன்ட் கமடோர் தர அதிகாரியான தம்மிக அனில் மாபா என்பவர் இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தார்.

கடத்தப்பட்ட இளைஞர்களிடம் இருந்த பணம், நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் குறித்த கடற்படை அதிகாரியினால் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததுடன், இளைஞர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் சடலங்கள் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

அத்துடன் இளைஞர்கள் பயணித்த வேன் வெலிசறை கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு இலக்கத் தகடு மாற்றப்பட்ட நிலையில் முகாமின் உள்ளே போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டிருந்தது.

இளைஞர்கள் காணாமல் போன முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்த குற்றப் புலனாய்வு பொலிசார் இது தொடர்பான தகவல்களைத் திரட்டி கடற்படை உயர் அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தனர். அதனையடுத்து உடனடியாக குறித்த வேனை 72 உதிரிப்பாகங்களாக பிரித்து அழிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்திருந்த குற்றப் புலனாய்வு பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய தம்மிக அனில் மாபா கடற்படை முகாமின் மருத்துவமனையில் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய நிலையில் கைது செய்திருந்தனர். கடந்த சில மாதங்களாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குறித்த வழக்கு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது கடற்படை அதிகாரியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் , குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இளைஞர்களின் சடலங்கள் கிடைக்கப் பெறவில்லை என்றும் எனவே அவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பொலிசார் கூறுவதை முற்றாக நம்ப முடியாமல் இருப்பதாகவும் வாதிட்டனர்.

எனவே கடற்படை அதிகாரிக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் அவர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி,சாட்சி வழங்கல் தொடர்பான தண்டனைக் கோவை சட்டத்தின் பிரகாரம் ஏனைய அனைத்து தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் கடற்படை அதிகாரிக்கு பிணை வழங்க மறுப்புத் தெரிவித்து, எதிர்வரும் ஜுலை மாதம் 13ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here