மரணத்தை விலை கொடுத்து வாங்கும் இளைஞர்கள்!

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தன. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை புகை பிடித்தல் என்பது இளைஞர்கள் மத்தியில் நாகரீகமாக இருக்கிறது. தான் பெரிய ஆள் என்பதை உணர்த்துவதற்காக சிகரெட்டை விரல் இடுக்கில் பிடித்தபடி நடமாடும் இளைஞர்கள் அதிகம்.

தற்காலத்தில் பெண்களும் புகை பிடிக்கும் பழக்கத்தை கைகொண்டு வருகின்றனர். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது புகையிலை பக்கற்றுகளிலே அச்சிடப்பட்டிருந்தாலும் கூட நாகரீக வளர்ச்சி காரணமாக அதனை யாரும் பொருட்படுத்துவதே இல்லை.

தற்போது உலகில் பாரதூரமான நோய்களை உருவாக்கும் மற்றும் உயிர் கொல்லியாக புகையிலை காணப்படுகிறதாக ஆய்வு ரீதியான தகவல்கள் சுட்டிக்காட்டுவதுடன், தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில் திடீர் மரணங்களுக்கான காரணியாக புகைத்தல் அமைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிபரத்தின்படி புகை பிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 60 இலட்சம் பேர் உலக அளவில் உயிரிழக்கிறார்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 25 இலட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாகின்றதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

இருப்பினும், உலக அளவில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், அறிக்கைகளின் படி உலக அளவில் 47 சதவீதமான ஆண்களும், 12 சதவீதமான பெண்களும் புகை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர்.

புகை பிடிப்பதால் எப்படிப் புற்றுநோய் வருகிறது என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

புகையிலையில் நோயை உண்டாக்கக்கூடிய காபனோரொட்சைட்டு(CO) சேர்வை அதிகம் உள்ளது. இதனால்தான், தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப்பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது.

இது மட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத் தன்மை உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருவர், நாளொன்றுக்கு ஒரு சிகரெட்டினை புகைப்பதன் மூலம் அவருடைய வாழ்நாளில் இருந்து 5 நிமிடங்கள் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகை பிடிப்பதால் அல்லது பிறர் பிடிக்கும் புகையிலையின் புகையை நுகர்வதால் இருமல், சளி உருவாகி ஆஸ்துமா பிரச்சினையும் வருகிறது.

ஆஸ்துமா இருப்பவர்கள் புகை பிடித்தால், அது ஆஸ்துமாவை மேலும் அதிகரித்து, மூச்சுத் திணறலை உருவாக்கி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துவதுடன், கர்ப்பிணிப்பெண்கள் புகை பிடித்தால் அது கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பாதிக்கும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான விளைவுகளின் மத்தியிலும், “ஒரு பக்கற், இரண்டு பக்கற்றுக்கள் என ஒரே நாளில் அதிகம் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதே எண்ணிக்கையில் ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டு புகை பிடித்தால் புற்றுநோய் நிச்சயமாக வந்துவிடும் என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், புகை பழக்கத்திற்கு ஆளாகுபவர்கள் சிலவேளைகளில் முன்னுதாரணமானவர்களை பின்பற்றியும், நண்பர்களின் வற்புருத்தலிலும் அல்லது திரைப்படங்களைப் பார்த்தும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

தொடர் புகைப்பழக்கத்திற்கு ஆளான ஒருவர் புகைப்பழக்கத்தை முற்றாக விட்டொழித்தாலும் அதன் தாக்கம் ஐந்து வருடங்கள் வரை இருந்து கொண்டே இருக்கும் என ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட எளிய வழிகளான யோகா பரிந்துரை செய்யப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் தியானத்துக்கு நகரலாம். புகையிலை பழக்கத்தில் இருந்து மனதை மாற்ற, வேறு விடயங்களில் ஈடுபட வேண்டும்.

அது சாக்லேட் தொடங்கி நூலகம் வரை எதுவாகவும் இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக இப்படியே மாற்றி, புகை பிடிப்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக விடுபட முடியும். நமது மன உறுதியினைப் பொறுத்து அது வேகமாக நிகழும் என்பதில் ஐயமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here