யாழ். குடாநாட்டில் பலாப்பழம், மாம்பழ வகைகளின் சீசன் ஆரம்பம்

யாழ். குடாநாட்டில் பலாப்பழம் மற்றும் மாம்பழ வகைகளின் சீசன் ஆரம்பமாகியுள்ளது.

யாழில் புன்னாலைக்கட்டுவன் , ஊரெழு, உரும்பிராய், கோண்டாவில், கொக்குவில், மீசாலை, கொடிகாமம், சாவகச்சேரி உள்ளிட்ட யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் பலாப்பழங்கள் தாராளமாகக் கிடைக்கின்றன.

இந்த நிலையில் யாழ். திருநெல்வேலி, சுன்னாகம், மருதனார்மடம், சங்கானை, சாவகச்சேரி உள்ளிட்ட பொதுச் சந்தைகளிலும், சிறு வர்த்தக நிலையங்களிலும் பலாப்பழ வியாபாரம் சூடு பிடித்துள்ளன.

குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் கடந்த சில தினங்களாகப் பலாப்பழங்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த நிலையில் பலாப்பழங்களின் அளவிற்கேற்ப 150 ரூபா,200 ரூபா, 250 ரூபா, 300 ரூபா, 400 ரூபா, 500 ரூபா எனப் பல்வேறு விலைகளிலும் பாலாப்பழங்கள் விற்பனையாகின்றன.

அத்துடன் குடாநாட்டின் தனித்துவமான கறுத்தக் கொழும்பான் உள்ளிட்ட மாம்பழ வகைகளின் சீசனும் ஆரம்பமாகியுள்ளமையால் சந்தைகளிலும், சிறு வர்த்தக நிலையங்கள் மற்றும் நடைபாதை வியாபார நிலையங்களிலும் மாம்பழ வியாபாரமும் அமோகமாக இடம்பெற்று வருகின்றன.

கறுத்தக் கொழும்பான் மாம்பழமொன்று அவற்றின் அளவுகளிற்கேற்ப 30 ரூபா, 40 ரூபா, 50 ரூபா, 60 ரூபா, 70 ரூபா எனப் பல்வேறு விலைகளிலும் விற்பனையாகின்றன.

கறுத்தக் கொழும்பான் மாம்பழங்களை யாழ். மக்கள் மாத்திரமன்றி யாழ். குடாநாட்டிற்கு வருகை தரும் தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டவர்கள் அதிக ஆர்வத்துடன் கொள்வனவு செய்து செல்வதைக் காண முடிகிறது.

உணவுத் தேவைகளுக்காகவும், ஆலயங்களின் திருவிழாத் தேவைகளுக்காகவும் பலாப்பழம், மாம்பழம் போன்ற பழ வகைகள் பொதுமக்களால் கொள்வனவு செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்,குடாநாட்டில் பலாப்பழம் மற்றும் மாம்பழ வகைகளின் சீசன் எதிர்வரும் யூன் மாத இறுதி வரை நீடிக்குமெனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here