அனர்த்தம் இடம்பெற்ற பிரதேச செயலகங்கள் 24 மணித்தியாலங்களும் திறக்க

அனர்த்தம் இடம்பெற்ற மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களை 24 மணித்தியாலங்களும் திறந்து வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் சுதேச விவகார அமைச்சின் செயலாளர் நீல் டி அல்விஸ் நேற்று முன்தினம் விசேட சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக்க நேற்று தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்று நிருபத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து பிரதேச செயலகங்கள் மாவட்டச் செயலகங்களில் கடமையாற்றி வரும் உத்தியோகஸ்தர்களின் சேவை மீள அறிவிக்கும் வரையில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி மீள அறிவிக்கும் வரையில் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எவரேனும் அதிகாரி ஒருவர் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

அவ்வாறு பணிக்கு சமூகமளிக்க தவறும் அதிகாரிக்கு பதிலீடாக வேறு ஓர் அதிகாரியை பணியில் ஈடுபடுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளில் கடமையாற்ற அனர்த்தம் இடம்பெறாத பகுதிகளிலிருந்து அதிகாரிகள் உத்தியோகஸ்தர்களை அழைக்க வேண்டுமா என்பதனை பிரதேச மாவட்டச் செயலாளர்கள் தீர்மானிக்க முடியும்.

மேலும், அனர்த்தம் காரணமாக பிரதேச செயலகம் ஒன்றை திறக்க முடியாது இருந்தால் மாவட்டச் செயலாளரின் உதவியுடன் வேறு ஓர் இடத்தில் பிரதேச செயலகக் காரியாலயத்தை தற்காலிகமாக ஆரம்பிக்க வேண்டும் என சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here