இந்திய முதலீட்டாளர்களை இலங்கை வரவேற்கின்றது

பொருளாதார மறுசீரமைப்பின் ஊடாக நாட்டின் நடுத்தர வருமானத்தை உயர்த்தும் வகையிலான தேசிய அரசாங்கத்தின் குறிக்கோளை அடைவதற்கு இந்திய முதலீட்டாளர்களின் வகிபாகம் பிரதானமானது என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்திய கைத்தொழில் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளடங்கிய தூதுக்குழுவினர் அமைச்சரை சந்தித்து இந்திய முதலீடுகள் குறித்தும் தங்களது எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தனர்.

இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,

பல்வேறு துறைகளுடன் சம்பந்தப்பட்ட இந்திய முதலீட்டாளர்களை இலங்கை வரவேற்கின்றது.

இலங்கையில் இந்தியர்களின் முதலீட்டுத் துறையின் வருமானம் 50மில்லின் டொலருக்கும் 20மில்லின் டொலருக்கும் இடைப்பட்டதாக இருக்கின்றது.

2015ஆம் ஆண்டு இந்தியா இலங்கையின் முதலீட்டில் 5ஆவது இடத்தை வகிக்கின்றது. நீங்கள் முதலீடுகளை இருபக்க வர்த்தகம் மூலம் மேலும் அதிகரிக்க முடியும்.

கடந்த வருடம் நமக்கிடையிலான இருபக்க வர்த்தகம் 4.3மில்லியன் டொலராக அமைந்திருந்தது. அதே போன்று எமது பிரதான ஏற்றுமதிப் பொருளான வாசனைத்திரவியங்கள், கஜூ, காகித அட்டைகள், கப்பல் மற்றும் படகுகள் ஆகியவை இந்தியாவில் பிரபலம் பெற்று விளங்குகின்றன.

60சதவிகிதத்திற்கு மேலான எமது ஏற்றுமதி பொருட்கள் இலங்கை – இந்திய சுதந்திர ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறுகின்றன.

இந்தியாவின் புதிய முதலீட்டு முயற்சிகள் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும், சரியான பாதையில் நாட்டை இட்டுச் செல்லவும் உதவும் என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த சந்திப்பின் போது இந்திய கூட்டுச் சம்மேளனம் சார்பில் கலந்து கொண்ட முதலீட்டுக் குழுவுக்கு தலைமைத்தாங்கிய ரமேஷ் குமார் முக்தா இந்த சந்திப்பின் போது ஒரு முக்கிய அறிவிப்பொன்றை வெளிப்படுத்தினார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

உள் நாட்டுக்குரிய சமையல் மற்றும் ஏனைய தேவைகளுக்கான வாயு விநியோக நடைமுறையில் ஒரு புதிய, புரட்சிகர மாற்றத்தை உருவாக்கும் வகையில் பிரமாண்டமான திரவ இயற்கை வாயு திட்டமொன்றை இலங்கையில் நாம் அறிமுகப்படுத்தவுள்ளோம். இந்த முறையை அறிமுகப்படுத்தினால் இயற்கைச் சூழலில் பாதிப்பு ஏற்படாது.

இலங்கையில் இதுவரை இல்லாத இந்த திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த திட்டங்களை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

தமது தலைமையில் வந்துள்ள இந்திய கூட்டுறவு சம்மேளனத்தினைச் சேர்ந்த முதலீட்டாளர்களில் அநேகமானோர் வலுவுடனும் (சக்தி) மற்றும் திரவ வாயுடனும் சம்பந்தப்பட்டவர்களேயாகும்.

பெற்ரனேட் எல். என். ஜீ லிமிடெட் இந்தியாவின் திரவ இயற்கை வாயு ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தை வகிக்கும் முன்னணி நிறுவனமாகும்.

இந்த நிறுவனமே இலங்கையிலும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றது என்று அவர் தொடர்ந்தும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here