கல்வியை தொடர்வதற்கு மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு

வவுனியா விபுலானந்தக் கல்லூரி மாணவனுக்கு மாவட்ட சமூக சேவை அலுவலகத்தின் சிபாரிசின் பேரில் கனடா புன்னகை அமைப்பினால் (Smile foundation) துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று (01) இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் , இலங்கை புன்னகை அமைப்பின் தலைவர் க. சர்மிலன் மாவட்ட சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் கி. வசந்தரூபன் மற்றும் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர், பிரதி அதிபர் மதிவதனன் ஆசிரியர் வில்வராஜா ஆகியோர் உரை நிகழ்த்தியிருந்தனர்.

உளவளதுறை ஆசிரியர் யசோதரன், ஆசிரியை பத்திரனா ஆகியோர் மூலம் தெரிவு செய்யப்பட்ட வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் வசிக்கும் குறித்த மாணவன் செல்வராசா தர்சிகனுக்கு பாடசாலை அதிபர் துவிச்சக்கர வண்டியை கையளித்துள்ளார்.

இந்த துவிச்சக்கர வண்டியை கனடாவில் உள்ள சமூக ஆர்வலர் சிவா சிவசோதிநாதன் தனது தந்தையார் அமரர் கதிரித்தம்பி சிவசோதிநாதனின் ஓராண்டு நினைவாக வழங்கி வைத்துள்ளார்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற நம் உறவுகள் இவ்வகையான பல்வேறு உதவிகளையும் பல்வேறுபட்ட அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் வழங்கி வருவதால் பல நலிவடைந்த மக்கள் பயன்களைப் பெற்று வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது மாணவர்கள் நம்பிக்கையுடன் தமது கல்வியைத் தொடரும் சாதக நிலைமைகளும் ஏற்பட்டுள்ளன எனவும், புலம்பெயர்ந்து வாழ்வோர் தொடர்ந்து தமது உதவிகளை செய்ய வேண்டியது எமது சமூகத்திற்கு மிக அவசியமானது எனவும் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இதன்போது கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here