தமிழரின் மீள்குடியமர்வு விடயம் அரசின் செயலணியில் இணைக்கப்பட வேண்டும்

மீள்குடியேற்ற அமைச்சின் சிறப்புச் செயலணி தமிழ் மக்களின் மீள்குடியமர்விலும் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கான தமிழ் மக்களின் மீள்குடியமர்வு விடயத்தையும் அதில் இணைக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மீள்குடியேற்ற அமைச்சின் சிறப்புச் செயலணியில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கான மீள்குடியேற்றம் தொடர்பில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தச் சிறப்புச் செயலணியில் தமிழ் மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இணைக்காது விட்டால் அந்தச் செயலணியைக் கலைக்க வேண்டும்.

நாவற்குழிப் பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் தெரிவில் தவறு இருக்கின்றது. தற்போது 50 சிங்களக் குடும்பம் எதிர்காலத்தில் 500 குடும்பங்களாக மாறும் சூழ்நிலை உருவாகும்” – என்றார்.

“இது தொடர்பில் ஆராய்வோம். மாவட்டத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஒரு குழு அமைத்து அதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுப்போம்” என்று இணைத்தலைவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த ஒருக்கிணைப்புக் கூட்டத்தில் பேசிய மாவை சேனாதிராஜா,

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டிப் பிரதேசம் 2 மாத காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படும் என்று தேசிய அரசு உறுதி வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

“வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியைப் பாதுகாப்புத் தரப்பினர் நீண்டகாலமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அந்தப் பிரதேசத்தை விடுவிக்குமாறு பல தடவைகள் தேசிய அரசிடம் வலியுறுத்தினோம். மயிலிட்டி பிரதேசத்தை இன்னும் 2 மாத காலப்பகுதிக்குள் விடுவித்து பொதுமக்களிடம் கையளிப்பதாக தேசிய அரசு உறுதி வழங்கியுள்ளது.

அத்துடன், பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கம் தொடர்பில் 1986ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அடிப்படையாக வைத்து மேலதிகமாகக் காணிகளை சுவீகரிப்பதற்கு தற்போதைய தேசிய அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. இதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று நாம் தேசிய அரசிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளோம்.

1986ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற வேண்டும் என்று கடந்த கால மாவட்ட ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here