நுவரெலியாவில் சீரற்ற காலநிலையால் 217 குடும்பங்களை சேர்ந்த 874 பேர் பாதிப்பு

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 214 குடும்பங்களை சேர்ந்த 857 பேர் பாதிக்கபட்டுள்ளனர். 34 வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன். 12 முகாம்களில், 162 குடும்பங்களை சேர்ந்த 624 பேர் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான அனர்த்த உதவிகளை நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. (இந்த புள்ளி விபரம் 02.06.2017 திகதி வரைக்குமானது)

மலையகப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. பெரும்பாலான பகுதியில் பாரிய முகில் கூட்டங்கள் காணப்படுகின்றன.

அத்துடன் குளிர்நிலையும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளின் மண்சரிவுக்கு காரணம் அபிவிருத்திக்காக மண் மேடுகள் வெட்டப்பட்டுள்ளமை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் பாரிய பாதை வெடிப்புக்கள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. கடுமையான குளிர் காரணமாக தோட்ட தொழிலாளர்கள் பெரும் இன்னல் நிலையை எதிர்நோக்கி வருகின்றனர்.

தொழில்களுக்கு செல்ல முடியவில்லை சென்றாலும் தொழில் செய்ய முடியவில்லை. விவசாயிகளுக்கும் பாரிய நட்டங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர் காலத்தில் பாரிய மரக்கறி தட்டுப்பாடும் இடம்பெரும் என தெரிய வருகின்றது.

பாதைகளில் பாரிய பனிமூட்டம் காணப்படுவதனால் சாரதிகள் கவனமாக வாகனங்களை செலுத்துமாரு போக்குவரத்து சபையினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமைத் தொடர்ந்து பல நாட்களுக்கு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கோரியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் பல இடர் அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதில் தாழ் நில பிரதேசங்களே பெரும்பாலும் பாதிப்படைந்துள்ளது. அண்மைக்காலமாக மலையக பிரதேசங்களிலும் பாரிய பாதிப்புகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் ஏனையோருக்கு வழங்கப்படும் நிவாரணங்களும் மலையகத்தவர்களுக்கு கிடைப்பது குறைவு என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் அடிக்கடி பெருந்தோட்டங்களை சார்ந்த தோட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

நிவாரணங்களை பொறுத்த வரையில் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கவாதிகள், தோட்ட நிர்வாகங்கள், நன்கொடையாளர்கள், வணக்கஸ்தலங்கள் போன்றவை வழங்கி வருகின்றனர்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் தோட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மந்த கதியை நோக்கி செல்கின்றது இதனை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான தோட்ட மக்களுக்கு இன்னமும் முறையான நிவாரணம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கும், பாதிப்படைந்த இடங்களுக்கும் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதிகள் தோட்ட மக்களுக்கும் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குளிரினால் (காற்றினால்) பாதிப்பு

பொதுவாக நுவரெலியா பிரதேசங்களில் ஏற்கனவே கடும் குளிர் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழைக்காரணமாக மேலும் குளிர் அதிகரித்துள்ளது.

இதனால் தொழிலாளர்கள் தேயிலை மலையில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஒருநாள் சம்பளத்திற்கு தேவையான இறாத்தலையும் பெற்றுகொள்ள முடியவில்லை.

தொடர்ந்து தொழில் செய்யவும் முடியவில்லை. கர்ப்பிணித் தாய்மார்களின் நிலையோ மேலும் கவலைக்கிடமாக உள்ளது பாடசாலை மாணவர்களின் பாடசாலை வருகையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாடசாலை அதிபர்கள் கூறுகின்றனர்.

வேலை வாய்ப்பு பாதிப்பு

முறையான சம்பளத்தை பெற்று கொள்ள வேண்டுமானால் தொழிலாளர்களின் வருகையும் இறாத்தல் பெறுவதும் மிகவும் முக்கியமானதொன்றாகும்.

இதனை நிவர்த்தி செய்ய முடியாமல் தோட்ட வேலை செய்பவர்களும், தொழில் வழங்குவதில் தோட்ட நிர்வாகங்களும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளன.

இந்த நிலையின் காரணமாக உற்பத்தி துறை பெரும் வீழ்ச்சியினை சந்தித்துள்ளது. இதேவேளை சற்று சுகயீனம் ஏற்பட்டதும் தொழிலாளர்கள் வருகையும் குறைந்துள்ளது.

அத்துடன் அவர்கள் அடிக்கடி சுகயீனம் அடைவதாகவும் சில வைத்தியர்கள் கூறுகின்றனர். ஒழுங்காக வேலைக்கு சென்றால் தான் அடுத்த மாதம் முறையான சம்பளம் கிடைக்கும் காலநிலை மாற்றத்தினால் இதற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளார்கள்.

அத்துடன் ஏனைய அரசுசார்ந்த தொழிலாளர்களும் ஒழுங்காக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி பாதிப்பு

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தேயிலை உற்பத்தியில் மாத்திரம் அல்லாது விவசாய துறையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேயிலையை பொறுத்த வரையில் நல்ல விளைச்சல் இருந்தும் அவற்றை முறையாக பயிற்றுக் கொள்ள முடியாத நிலையும் தொழிலாளர்களின் வருகையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இரசாயண உரம், இரசாயண மருந்து பாவனை போன்றவற்றையும் பிரயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், ஏற்கனவே பாவிக்கப்பட்ட உரங்கள் மழையில் கழுவி செல்லப்பட்டுள்ளது என்று தோட்ட முகாமையாளர் கூறுகின்றார்.

இந்த நிலை தொடருமாயின் ஏற்றுமதியில் தேயிலையின் செல்வாக்கு குறைய நிறைய வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகின்றது.

கல்வியில் பாதிப்பு

இரண்டாம் தவணை ஆரம்பமாகி தவணை பரீட்சைக்கும் உயர் தரப்பரீட்சைக்கும் ஆயத்தமாகி கொண்டிருக்கும் இவ்வேளையில் பாடசாலைக்கு மாணவர்களின் வரவு நாளாந்தம் குறைந்து வருவதாக தெரியவருகிறது.

இதற்கு காரணமாக குளிர், முறையாக போக்குவரத்து இன்மை போன்றவை குறிப்பிடப்படுகின்றது . பெரும்பாலும் தோட்ட பாடசாலைக்கு தேயிலை தோட்டம் வழியாகவும், காடுகள் வழியாகவும், பேருந்து, வான் வழியாகவும் செல்ல வேண்டியுள்ளது. மழைக்காரணமாக இவையும் தனது சேட்டைகளை காட்டுவதாக தெரிய வருகின்றது.

மரக்கறி செய்கை பாதிப்பு

பெரும்பாலும் நுவரெலியா பிரதேசங்களிலேயே மரக்கறி உற்பத்தி செய்யபட்டு வருகிறது. மலைக்காரணமாக புதிதாக நாற்றபட்ட மரக்கறி நாற்றுகள் அழுகி வருவதாகவும் மரக்கறிக்கு போடப்பட்ட உரங்கள் மழை நீரினால் கழுவிச்செல்லப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

நாற்று மேடை பாதிப்படைந்து சில மரக்கறிகளின் அறுவடையும் குறைவாக இருப்பதாக தெரியவருகின்றது. சிலர் விவசாயம் செய்வதற்காக ஏற்பாடு செய்த நிலங்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

அத்துடன் சில மரக்கறிகள் அறுவடை செய்து கொள்ள முடியாத நிலையும் விற்பனை செய்து கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

போக்குவரத்து பாதிப்பு

மழை காரணமாக வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ள அதேவேளை ஹட்டன், நுவரெலியா பிரதேசங்களில் பனி மூட்டம் அதிகரித்து உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விபத்துகள் ஏற்பட அதிகளவான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு இலங்கை போக்குவரத்து பொலிஸார் கூறுகின்றனர்.

அதேவேளை சில இடங்களில் போக்குவரத்து சேவையும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

நீர் நிலைகள் திறப்பு

தொடரும் மழையில் சில நீர் நிலைகள் அண்மையில் திறக்கபட்டன. பின்னர் மூடப்பட்டன. தற்போது சில நீர் நிலைகள் மழை நீர் நிரம்பி வருகின்றது.

இந்த நிலை தொடருமானால் கொத்மலை, கம்பியன், மவுசாகளை, விமலசுரேந்திர, காசல்ரீ போன்ற நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கவேண்டிய நிலை ஏற்படும் என நீர்தேக்க பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மக்கள் அவதானத்துடன் இருப்பதுடன் தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதொன்றாகும்.

இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக வானிலை அவதான நிலையத்தினால் அடிக்கடி கூறப்படும் அறிவிப்புகளை கடைப்பிடிக்க வேண்டும்.

அத்துடன் இடி, மின்னல் போன்றவற்றினால் பாதிப்புகள் குறைவாக இருந்தாலும் அவற்றினால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக நீரேந்து பகுதிகளில் சிறுவர்கள் செல்வதை தவிர்த்து கொள்வதோடு, பெற்றோர் பிள்ளைகளை மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here