வவுனியாவில் பாடசாலை மாணவன் பலி

வவுனியா – கனகராஜன்குளம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த பாடசாலை மாணவனை ஆசிரியர் தாக்கியதால் மாணவன் உயிரிழந்துள்ளார் என பாடசாலை மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவன் குறிசுட்டகுளம் பிரதேசத்தை சேர்ந்த தர்மராசா ஜனார்த்தன் (வயது17) க.பொ.த உயர் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

தொடர்ந்தும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கனகராஜன்குளம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் நேற்று சிரமதானப் பணியினை முன்னெடுத்துள்ளனர். இதன்போது தரம் 10 சேர்ந்த மாணவன் ஒருவர் உயிரிழந்த மாணவனின் நண்பனைத் தாக்கியுள்ளார்.

இதனை அடுத்து உயிரிழந்த மாணவன் தாக்கிய மாணவனை அதட்டியுள்ளார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த பாடசாலை ஆசிரியர் தர்மராசா ஜனார்த்தனை ஏனைய மாணவர்களுக்கு முன்பாக வைத்து அடித்துள்ளார்.

சம்பவத்தில் மனமுடைந்த இந்த மாணவன் வீடு சென்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் புளியங்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், வைத்தியர்கள் அந்த மாணவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த மாணவன் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரவில்லை என கூறப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பாக கனகராயன்குள பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here