ஊடகவியலாளர் நடேசனின் கொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு

கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு நீதி கிடைப்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாத நிலையில் இன்றைய ஆட்சியாளர்களும் அதே பாணியில் செயற்பட்டுவருவது கவலைக்குரியதாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் படுகொலை தொடர்பில் இதுவரையில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் விசாரணையை துரிதமாக முன்னெடுக்க வலியுறுத்தும் வகையில் நாளை(03) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

குறித்த போராட்டம் காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளராக இருந்து ஊடகத்துறையினை சிறந்தமுறையில் மேற்கொண்டுவந்த ஐயாத்துறை நடேசன் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு 13 வருடங்களை கடந்துள்ள நிலையில் இதுவரையில் முறையான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது. கடந்த ஆட்சிக்காலத்தில் இவ்வாறான சம்பவங்களுக்கு நீதி கிடைப்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாத நிலையில் இன்றைய ஆட்சியாளர்களும் அதேபாணியில் இருந்துவருவது கவலைக்குரியதாகும்.

இலங்கையில் கடந்த காலத்தில் சிங்கள ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பிலும் படுகொலை செய்யப்பட்டது தொடர்பிலும் விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுவரையில் ஒரு தமிழ் ஊடகவிலாளர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பிலும் தாக்கப்பட்டது தொடர்பிலும் இதுவரையில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாமை கவலையளிப்பதாகவுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் படுகொலை தொடர்பில் இதுவரையில் முறையான விசாரணை இதுவரையில் ஆரம்பிக்கப்படாததை கண்டித்தும் உடனடியாக விசேட பொலிஸ் குழுவொன்றினை அமைத்து விசாரணையை துரிதமாக முன்னெடுக்குமாறு வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நடவடிக்கையினை எடுத்துவருகின்றது.

அதன் கீழ் நாளை(03) பிற்பகல் 04.00மணியளவில் காந்தி பூங்கா முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் மாவட்ட ஊடகவியலாளர்கள் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் சிவில் சமூக பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளை சார்ந்தோர் வருகைதந்து ஆதரவு வழங்குமாறும் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here