கபீர் ஹாசிம் – லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு இடையில் முரண்பாடு

அமைச்சு அலுவலகத்தை பகிர்ந்து கொள்வதில் அமைச்சர்களான கபீர் ஹாசிமிற்கும், லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரச முயற்சியாண்மை அமைச்சர் கபீர் ஹாசிம் தனது அமைச்சின் திட்டமொன்றுக்காக, ராஜாங்க அமைச்சின் அலுவலக அறைகளை ஒதுக்கீடு செய்து கொண்டுள்ளார்.

இதனால் அந்த அமைச்சின் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவிற்கு அலுவலக வசதிகள் மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் ஜனாதிபதியினால் அரச முயற்சியாண்மை ராஜாங்க அமைச்சராக லக்ஸ்மன் யாப்பா நியமிக்கப்பட்டிருந்தார்.

இன்றையதினம் அவர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

எனினும் அலுவலகம் தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்து ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ளும் நிகழ்வுகளை ஒத்தி வைத்துள்ளார்.

அமைச்சர் தனது ஆவணங்களை புதிய காரியாலயத்திற்கு எடுத்துச் சென்ற போதிலும் அவற்றை வைத்துக் கொள்ளக்கூட போதியளவு இடவசதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக இந்த அமைச்சின் ராஜாங்க அமைச்சர் பொறுப்புக்களை எரான் விக்ரமரட்ன வகித்து வந்தார்.

அதன் போது 9 அறைகள் ராஜாங்க அமைச்சிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது எனவும், தற்போது அதில் ஆறு அறைகளை அமைச்சரவை அமைச்சர் காபீர் ஹாசிம் மீளப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விடயம் பெரிய பிரச்சினை அல்ல எனவும் எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் இடப்பிரச்சினை தொடர்பில் தீர்வு வழங்கப்படும் எனவும் அரச முயற்சியான்மை அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவா விதாரன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here