மந்த கதியில் புகையிரத நிலைய வீதி புனரமைப்பால் சிரமத்தின் மத்தியில் வர்த்தகர்கள்

வவுனியா புகையிரத நிலையத்தின் வீதி புனரமைப்புக்கள் மந்த கதியில் நடைபெறுவதால் வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா நகரத்திற்கும், குருமன்காட்டிற்கும் இடையிலான புகையிரத நிலையத்தின் வீதி பல வருடங்களாக சேதமடைந்திருந்த நிலையில் கடந்த வருடத்தில் இருந்து இதன் திருத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.

எனினும் திருத்த வேலைகளின் போது வீதியின் இரு மருங்கிலும் வெட்டப்பட்ட கால்வாய்கள் முழுமையாக பூரணப்படுத்தப்படாது குன்றும், குழியுமாக காணப்படுகின்றது என பொது மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கால்வாய்கள் ஒரு வாரத்திற்குள் வெட்டப்பட்டு திருத்த பணிகள் முடிவடைந்து மக்கள் பாவனைக்காக விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் சில இடங்களில் இரண்டு மாதங்களுக்கு மேலாகவும் வெட்டப்பட்ட கால்வாய்கள் பூரணப்படுத்தப்படாது காணப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வீதியோரத்தில் அமைந்துள்ள தமது வர்த்தக நிலையங்களுக்கு வாடிக்கையாளர்கள் வர சிரமப்படுவதாகவும், இதுவரை பூரணப்படுத்தப்படாத வடிகால்களால் சில விபத்துக்களும் நேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் பல தடவைகள் முறையிட்ட போதிலும் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபையை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here