அரசமைப்பு மீளமைப்புப் பணி ஸ்தம்பிதமடையும் அபாயம்

புதிய அரசமைப்புத் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு நிலவுவதால் அரசமைப்புத் தயாரிப்புப் பணிகள் ஸ்தம்பிதடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

புதிய அரசமைப்புக்கு சுதந்திரக் கட்சியிலுள்ள உறுப்பினர்கள் சிலர் பச்சைக்கொடி காட்டியிருந்தாலும் ஏனைய உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

புதிய அரசமைப்பு தேவையில்லை. தற்போதுள்ள அரசமைப்பில் மறுசீரமைப்பு செய்தாலேயே அது போதுமானதாக இருக்கும் என்பதே எதிர்ப்பவர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.

அரசமைப்பு மீளமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் கூட்டம் கடந்த 24ஆம் திகதி முதல் 4 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.

அரசமைப்பு மீளமைப்புக்கான வழிநடத்தல் குழுவால் நியமிக்கப்பட்டிருந்த உபகுழுக்களின் அறிக்கைகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அவை தொடர்பில் ஆராயப்பட்டும் விட்டன. எனவே, வழி நடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையை இறுதிப்படுத்தும் நோக்கிலேயே தொடர் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

எனினும், புதிய அரசமைப்பு, ஒற்றையாட்சி, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளிட்ட சில பிரதான விடயங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இதனால், இடைக்கால அறிக்கையை இறுதிப்படுத்துவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டு அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட பின்னரே இறுதி அறிக்கை தயாரிக்கப்படும்.

எனவே, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருந்தால் மாத்திரமே புதிய அரசமைப்பை நோக்கி நகரமுடியும்.

ஆகவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவும் இதற்குக் கட்டாயம் தேவைப்படுகின்றது. மஹிந்த அணியும் அரசியல் நோக்கில் இறுதி நேரத்தில் தங்களது முடிவை மாற்றியமைக்கக்கூடும்.

ஆகவேதான், சுதந்திரக் கட்சியை சமாளிப்பதற்குரிய முயற்சியில் ஐ.தே.கவின் உயர்பீடம் ஈடுபட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதற்கு முன்னர் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே அடுத்தகட்ட கூட்டத்துக்குரிய திகதி தீர்மானிக்கப்படும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கின்ற போதிலும், கட்சி சார்ந்த நிலைப்பாடுகளின்போது தமது கட்சியில் பெரும்பான்மையானோர் எடுக்கும் முடிவையே ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here