ஒரு உறவுக்குத் துன்பம் ஏற்படும் போது மற்றைய உறவுகள் ஓடி வந்து உதவ வேண்டும்

அனர்த்த பாதுகாப்புச் சட்டத்தில் தற்போது திருத்தங்கள் கொண்டு வரப்படுவது வரவேற்கத்தக்கதும் அதே சமயத்தில் மனவருத்தப்படக் கூடியதுமான விடயம் என கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் கிருஸ்ணப்பிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

தென்பகுதியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சபை என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற விசேட அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கில் பெருவெள்ளம், சுனாமி அனர்த்தம் மற்றும் பலவித அனர்த்தங்கள் இந்த நாட்டில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் இப்போது தான் பழைய சட்டத்தின் குறைபாடுகள் உணரப்பட்டிருக்கின்றது.

இப்போதாவது இந்த விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக இருப்பினும், தென்பகுதியில் கதவுகள் தட்டப்பட்ட போதுதான் இந்த உணர்வு வந்திருக்கின்றது என்ற விடயம் மனவருத்தத்தோடு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது.

ஒரு உறவுக்குத் துன்பம் ஏற்படுகின்ற போது மற்றைய உறவுகள் ஓடிச் சென்று உதவ வேண்டும். இந்த விடயத்தை மனிதன் அனைவரும் ஒரே இனம் என்கின்ற ரீதியிலேயே பார்க்க வேண்டும்.

இந்த பாரிய இயற்கை அனர்த்தத்தில் பல இலட்சம் மக்களும், பல மாவட்டங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் செய்தியை கேட்டதும் இந்தியா உடனடியாக மூன்று தடவைகள் உதவிப் பொருட்களையும், பணியாளர்களையும் அனுப்பியது.

அதே போன்று பாக்கிஸ்தான் உட்பட 40இற்கும் மேற்பட்ட நாடுகள் உதவிகள் வழங்கியிருக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இது தொடர்பாக விசேட கூட்டங்களை நடத்தி நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளார்கள்.

எமது மாகாண சபையைப் பொருத்தமட்டில் எமது உதவியானது இராமர் அணை கட்டுவதற்கு அணில் புழுதியில் குளித்து அந்த புழுதியை கொண்டு அணையில் உதறியது போன்ற அளவிலானதாகத் தான் இருக்கும்.

இருப்பினும், இதற்கான திட்டத்தினை வகுத்துக் கொண்டு மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் குறித்த ஒரு பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அதன்படி எடுக்கின்ற முடிவுக்கிணங்க அவர்களுக்கு உதவிகள் வழங்க வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடந்த போதெல்லாம் நாங்கள் என்னென்ன செய்தோம் எவற்றைக் கற்றுக் கொண்டோம் என்பது தொடர்பாகவும் மீளாய்வு செய்து பார்க்க வேண்டும்.

ஆனர்த்தங்கள் தொடர்பில் நிலைமைகளைக் கையாள்வதற்காக தற்போது நடைமுறையில் உள்ள சட்டமான 04/1942 வெள்ள பாதுகாப்பு சட்டத்தில் ஒரே ஒரு திருத்தமே கொண்டு வரப்பட்டுள்ளது. இயற்கையாலும், மனிதராலும் மிகப்பெரிய அனர்த்தங்கள் எமது நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன.

1957இல் கிழக்கில் இடம்பெற்ற பெருவெள்ளம், 2004இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம், இதற்கிடையில் அவ்வப்போது பலவித அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போது தான் பழைய சட்டம் அனர்த்த நிலைமையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த போதாமல் இருக்கின்றது என்று உணரப்பட்டிருக்கின்றது.

இதன்படி இவ்வாறான நிலைமைகளைக் கையாளக்கூடிய விதத்தில் நீர்ப்பாசன, சுற்றாடல் பாதுகாப்பு போன்ற திணைக்களங்களையும் உள்ளடக்கியதான அனர்த்த முகாமைத்துவ சட்டம் ஒன்றை ஆக்குவதற்கு நடவடிக்கைகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இப்போதாவது இந்த விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக இருப்பினும், தென்பகுதியில் கதவுகள் தட்டப்பட்ட போதுதான் இந்த உணர்வு வந்திருக்கின்றது என்ற விடயம் மனவருத்தத்தோடு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது.

பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு துரித கதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் உயர்தரத்தில் அமைய வேண்டும்.

இதே நேரத்தில் மனித செயற்பாட்டால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்ட அதாவது போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இதே செயற்பாடுகள் அதேதரத்தில் செய்யப்பட்டனவா என்பதை அரசு தனக்குள்ளேயே கேள்வியாக்கிக் கொண்டு செயற்பட வேண்டும்.

இதேவேளை இப்போது கையாளப்பட இருக்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கிற்கும், அதே விதத்தில் பிரயோகிப்பதற்கு செயற்பட வேண்டும் என்றும் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here