அட்டாளைச்சேனை பிரதேச பதில் செயலாளராக ஐ. ஜே. அதிசயராஜ்சை நியமிக்குமாறு

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு பதில் செயலாளராக ஐ.ஜே.அதிசயராஜ்சை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாகாண முஸ்லிம் சமாதான நீதவான்கள் அமைப்பு, அட்டாளைச்சேனை மத்திய முஸ்லிம் லீக் வாலிப முன்னணி அட்டாசைக்சேனை யுனஸ்கோ, அட்டாளைச்சேனை-16 கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இணைந்து கோரிக்கை மகஜரிணை அனுப்பி வைத்துள்ளது.

அத்துடன், பொது நிர்வாக முகாமைத்துவ அமைச்சர் மத்தும பண்டா, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, பொது நிர்வாக முகாமைத்துவ பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, பொது நிர்வாக முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் நில்டி அல்விஸ், அம்பாறை அரசாங்க அதிபர் வனிகசிங்க ஆகியோருக்கு மகஜர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் கடந்த மூன்று மாதங்களாக நிரந்தர பிரதேச செயலாளர் இன்றி பொது மக்கள் பல சிரமங்களை அடைந்து வருகின்றார்கள்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக இருந்து வந்த முன்னாள் செயலாளர் ஐ.எம்.ஹனிபா இடமாற்றம் பெற்றுச் சென்றதன் பின்னர் தற்போது உதவிச் செயலாளராக கடமையாற்றி வரும் அதிசயராஜ் மட்டுமே பிரதேச செயலாளர் என்ற ரீதியிலும் உதவிச் செயலாளர் என்ற ரீதியிலும் சேவையில் உள்ளார்.

அதனால் சகல பொறுப்புக்களையும் நிர்வகித்தல் மற்றும் வாரத்தில் 2,3 நாட்கள் அம்பாறை கச்சேரி மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ வெளி கூட்டங்கள் மற்றும் வேலைகள் என்று சென்றால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் ஒரு உயர் அதிகாரியின்றி மக்கள் மிகவும் அவதிப்படுவதையும் மக்கள் ஏமார்ந்து செல்வதையும் நாளாந்தம் காண முடிகின்றது. இந்த நிலை மாற வேண்டும்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் தற்போது நிரந்தர பிரதேச செயலாளர் இன்றி மிக அதிகமான வேலைப் பழுவுடன் இன, மத, பேதமின்றி கடமையாற்றி வருகின்றார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவு என்பது சிங்கள முஸ்லிம் தமிழ் என்ற மூவின மக்கள் வாழும் 32 கிராம சேவகர்கள் கொண்ட பிரதேசமாகும்.

அந்த வகையில் மூவின மக்களையும் அனுசரித்து மிகவும் நிதானமாக தன் கடமையை அதிசயராஜ் செய்து வருகின்றார்.

அட்டாளைச்சேனையில் கடந்த காலத்தில் சிங்கள அதிகாரி கடமையாற்றியுள்ளார். ஆனால் அட்டாளைச்சேனையின் வரலாற்றில் இன்னும் தமிழ் அதிகாரியொருவர் கடமையாற்றியதில்லை, அம்பாறை மாவட்டம் என்பது அடிக்கடி தமிழ் முஸ்லிம் இன முறுகல் கொண்ட பகுதியாகும்.

அதனால் அட்டாளைச்சேனை போன்ற கடின பிரதேசத்தில் மூவின மக்களையும் அனுசரித்துச் செல்லக் கூடிய ஒரு அதிகாரி வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த அதிசயராஜ்சை பதில் பிரதேச செயராளராக நியமிக்கலாம்.

அட்டாளைச்சேனையில் ஏற்கனவே இரண்டு முஸ்லிம் பிரதேச செயலாளர்கள் மிக ஜுனியர்கள் பதில் செயலாளர்களாக கடந்த காலங்களில் கடமையாற்றியுள்ளார்கள்.

ஆனால் இந்த அதிசயராஜ் எழுது வினைஞராக மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியாக 14 வருடங்கள் சேவையிலும் அனுபவத்திலும் உள்ளார்.

அப்படியானால் அதிசயராஜ்சை பதில் செயலாளராக நியமிப்பதில் எவ்விதமான குறையுபாடும் இருக்காது என்று கருதுகின்றோம்.

முஸ்லிம் பகுதி என்பதால் முஸ்லிம் செயலாளர்தான் நியமிக்க வேண்டும் என்று சுற்று நிருபமோ அல்லது கட்டாயமோ இல்லை.

எங்கும் எல்லோரும் கடமையாற்றக் கூடிய நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் முஸ்லிம் பகுதிகளில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

தமிழனுக்கு ஒரு நீதி முஸ்லிமுக்கு ஒரு சலுகை என்ற நியதியை மாற்றி முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் குறுக்கீடுகள் இன்றி தமிழன் என்ற பாரபட்சம் காட்டாது தமிழன் என்ற வேற்றுமை காட்டாது இன நல்லறவுக்கு எடுத்துக் காட்டாக அட்டாளைச்சேனை பதில் பிரதேச செயலாளராக அதிசயராஜ்சை நியமிக்குமாறு வேண்டுவதுடன்,

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு ஒரு உதவிச் செயலாளரும் நியமிக்குமாறு இத்தால் எமது பலமான கோரிக்கையாக முன்வைக்கின்றோம். இவ்வாறு அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here