அண்மிக்கும் ஆபத்து! இடம்பெயரும் யாழ் தீவக மக்கள்.

ஸ்ரீலங்காவின் தென்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்ற போதிலும் வடமாகாணத்தில் அதிக வரட்சி காரணமாக குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் தீவக பகுதி மிகவும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் நீர் பற்றாக்குறை காரணமாக ஊரை விட்டு வெளியேறும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

வரட்சியின் காரணமாக வடமாகாணத்தில் 1 இலட்சத்து 30 ஆயிரத்து 243 குடும்பங்களை சேர்ந்த 4 லட்சத்து 40 ஆயிரத்து 531 பேருக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்த மாவட்டங்களை சேர்ந்த இடர்முகாமைத்துவ மத்திய நிலையங்கள் தெரிவித்துள்ளன.யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 670 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்மாவட்டத்தில் 1 இலட்சத்து 21 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் கடும் வரட்சி காரணமாக தீவகப்பகுதிகளான அல்லைப்பிட்டி, புங்குடுதீவு, மண்டதீவு, வேலணை போன்ற பகுதிகளில் மக்கள் குடிப்பதற்கான தண்ணீர் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இதனால் மக்கள் தண்ணீருக்காக வீதியில் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலைய ஐ.பி.சி. தமிழின் கமராவிற்குள் பதிவாகியது.

2 பேர் உள்ள குடும்பங்களுக்கு 20 லீற்றர் தண்ணீரும் 3 அல்லது 4 பேர் உள்ள குடும்பங்களுக்கு 30 லீற்றர் தண்ணீரும் வழங்கப்படுவதாக தெரிவிக்கும் மக்கள்இ தண்ணீருக்காக தாங்கள் வீதியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.   300 குடும்பங்கள் வாழும் ஊருக்கு 100 குடும்பங்களுக்கான தண்ணீரை மட்டும் பிரதேச செயலகங்கள் வழங்குவதாகவும் அந்த தண்ணீரும் 3 நாட்களுக்கு ஒரு தடவையே வழங்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குடிப்பதற்கான தண்ணருக்கு மேலதிகமாக கிணறுகளில் உள்ள தண்ணீர் வற்றிபோயிருக்கும் நிலையில் சொந்த ஊர்களை விட்டு வெளியேறும் நிலையே உருவாகியுள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் வறட்சியினால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்தகால உதவிகளை வழங்கவேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை நீடித்துவரும் வரட்சி காரணமாக 35670 குடும்பங்களை சேர்ந்த 115020 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன

வரட்சி காரணமாக கரைதுறைப்பற்று புதுக்குடியிருப்பு மணலாறு ஒட்டுசுட்டான் துணுக்காய் மாந்தை கிழக்கு ஆகிய ஆறு பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த 35670 குடும்பங்களை சேர்ந்த 115020 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன

இதனடிப்படையில் அதிகம் பாதிக்கப்பட்டு குடிநீர் வசதியின்றி தவிக்கும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள 33 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here