ஆயுதம் ஏந்தும் வரை நிகழ்ந்து வந்த அத்தனை அரசியல் நகர்வுகளும் தமிழருக்கு கற்றுத்தந்த விடயங்கள் என்ன?

தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எட்டப்படாத சந்தர்ப்பத்தில் அபிவிருத்தி என்ற பதத்தைப் பாவிப்பதற்குக் கூட அருகதை அற்றவர்களாக நம் நாட்டவர்கள் மாறிவிடுவோம்.

இதனை ஒத்த கருத்தினையே கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமைச்சர் மங்கள சமரவீரவும் வெளிப்படுத்தியிருந்தார்.

இன்றைய உலக நடப்பில் மதம், சாதி மற்றும் இனக்குழுமங்கள் என்ற வரையறைகள் புற நீங்கிச் செல்லும் சந்தர்ப்பங்களே முன்னேற்றங்களாக பரிணமிக்க முடிகின்றது.

தேசியம் என வரையறுக்கப்படுபவைகள் தனியாக ஒரு இனக்குழுமம் தனது வாழ்க்கைமுறையை ஆட்சிமுறையைக் குறிப்பது என்பதிலிருந்து வெளிச்சென்று உலகமயமாதலில் எவ்வண்ணம் தன்னைத் தயார்ப்படுத்தி முன்னேற்றிக்கொள்கின்றது என்ற கொள்கைவகுப்பிற்குள் பிரவேசித்திட வேண்டும்.

இது தான் இன்றைய உலக ஒழுங்கில் உண்மையான தேசியம். மாறாக இனவாதம் இலங்கையிலும் மத, சாதி வாதங்கள் இந்தியாவிலும் தேசியம் என்ற சொல்லாடலின் கீழ் அரசியலாளர்களினால் மிகச் சாதுரியமாக கையாளப்படுவது மிகக் கவலைக்குரிய விடயமாக நோகவேண்டியுள்ளது.

இவ்வாறான கருத்தியலை முற்கொணரமுற்படும்பொழுது நீங்கள் என்னை தேசியத்திற்கு எதிரானவன் துரோகி போன்ற அடைமொழிகளால் அழைக்கலாம் பரவாயில்லை சற்றே யதார்த்தத்தினை உணர முற்படுங்கள் அதற்கானதொரு சிறிய முயற்சி தான் இதுகூட.

இலங்கைத்தீவில் சிங்கள அரசியல் தலைமைகள் மிதவாதத் தன்மை உடைய பெரிய கட்சிகளாக இருப்பினும் மதவாதம் இனவாதம் நிறைந்த உதிரிக் கட்சிகளை நிழலில் தமது ஆதரவுடனேயே நகர்த்திவருகின்றனர்.

இதேபோல சற்றே வேறுபட்டு தமிழ் முஸ்லிம் அரசியற் கட்சிகளும் முரண்போக்கு அரசியல் கட்சி அமைப்புக்களைக் காத்து வருகின்றன.

ஒரு பொது பலசேனாவினாலோ, ராவய பலய வினாலோ ஒரு நாட்டின் ஜனாதிபதியை, பிரதமரை ஆளும் அரசாங்கத்தினை அர்த்தமற்ற விதத்தில் அவதூறாக விமர்சிக்க முடியுமாயின் ஒரு நாட்டின் அரசமைப்புக் கொள்கைகளுக்கு மாறாக இனவாதம் நிறைந்த மதவாதம் நிறைந்த கருத்துக்களை வெளியிட்டு பிரிவினை வாதத்தினை தூண்டிவிட முடியுமாயின் அதுவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் சரத்துக்களுக்குள் உள்ளடங்கும் விடயங்கள்தான்.

இவர்களுக்கும் நடவடிக்கை எடுக்க அரசு பின்னிற்கின்றதா என எண்ணிடத்தோன்றுகின்றது.

இதே நிலைப்பாட்டினைத் தான் ஒரு சில தமிழ்த் தலைவர்களது நடவடிக்கைகளிலும் பேணிவருகின்றது. பாராளுமன்ற தகுதி அற்றவர்கள் அரசாங்கத்தினை பாராளுமன்றத்திற்கு வெளியே கண்மூடித்தனமாக விமர்சிக்க முடியாது.

ஆனால் அவர்களையும் விமர்சிக்க விட்டு அரசு பின்னிப்பதற்கான காரணம் அவர்கள் அனைவரையும் சட்டப்படி நடவடிக்கைகளுக்குள் உட்படுத்துவதால் கிடைக்கப்பெறும் அனுகூலத்தினை விடவும் இவர்களை வெளியில் வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக அமைவதே காரணமாகின்றது.

மாறாக தமிழ்த் தலைவர்களுள் தேசிய வாதம் பேசுகின்றோம் எனப் பிரிவினைவாதம் பேசுகின்றார்கள். பிரபாகரன் தேசிய வாதம் பேசினார் அல்லது பிரிவினை வாதம் பேசினார் என சிங்களத் தலைவர்கள் சொன்னால் அதனை உலகம் ஏற்றுக்கொண்டது.

சர்வதேசமும் விடுதலைப்புலிகளை அழிக்க பல வழிகளில் அரசுக்கத் துணைபோயிற்று. சரி தவறு என்பதற்கு அப்பால் எமது உத்திகள் முப்பது வருட ஆயுத கலாச்சார வரலாறும் சுதந்திர்த்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து ஆயுதம் ஏந்தும் வரை நிகழ்ந்து வந்த அத்தனை அரசியல் நகர்வுகளும் தமிழருக்கு கற்றுத்தந்த விடயங்கள் என்ன?

அடிப்படையில் எங்களால் பிரச்சினைகள் மீது பிரயோகிக்கப்படும் கருவிகளில் தான் குறைபாடு இருக்கின்றது என்பதனை சிங்கள இனவாத மதவாத கட்சிகளும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் சிலவும் ஏற்க மறுக்கின்றன.

இதிலிருந்து சற்று உள்நுழைந்து விடுதலைப்புலிகளது சித்தாந்தங்களை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கைவிட்டு துரோகத்தனத்தில் ஈடுபடுகின்றது எனக் கூறிக்கொள்ளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புக் கொள்கையுடை அரசியல்வாதிகள் தாங்கள் விடுதலைப் புலிகளது சித்தாந்தத்தில் இருப்தாகச் சொல்லிக்கொள்கின்றார்களா?

அவ்வாறு இருப்பின் ஒற்றைச் சிறியதொரு கேள்வி ‘ தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் அரசியலத் தலைமைகள் அனைத்தையும் இணைத்தார்களேஒற்றுமையே எமது எதிர்காலம் என்பது தானே அதன் கருத்து அவ்வாறு இருக்கையில் நீங்கள் வெளிச்செல்லக் காரணம் என்ன?

சரி கடந்த மாதம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு வடக்கு மாகாண முதல்வர்தானே ஒருங்கிணைத்து தலைமை தாங்கி அனைவரையும் அழைத்துக் கொண்டாடியிருந்தார்.

இந் நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவை என அழைக்கப்படும் அடையாளத்துடன் யாரும் கலந்து கொள்ளாமைக்கான காரணம் யாதோ? அன்றேல் அன்றைய தினம் தனிநிகழ்வாக தமிழ் மக்கள் காங்கிரஸ் கட்சி தனியாக நந்திக்கடற்கரையில் கொண்டாடிடக் காரணம் என்ன?

மாறாக தமிழ் மக்கள் பேரவை என்பது வலுவுடையதொரு அமைப்பாக வலம்வந்தால் அதன் செயற்தலைவரான வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனது கட்டுப்பாட்டுக்குள்ளும் நீங்கள் இருக்கமாட்டீர்கள் எனத் தெரியப்படுத்துவதற்கான ஒரு சமிக்கையாக அல்லது ஒரு நிகழ்ச்சியாக இதனை நோக்கிடலாமா?

அரசியலில் ஈடுபடுவதற்கு மிகமுக்கியமானது பிரபலமாவது என்பது அடிப்படைத்தத்துவம் இந்த நிலை உருவாக்கத்திற்கு இந்தியாவில் சினிமா மிகப்பெரிய பங்காற்றிவருகின்றது என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது.

இது இன்றைய நடிகர் ரஜனிகாந் வரைக்கும் அவர்களின் வாழ்க்கையுடன் வரலாறாகின்றது. ஆனால் இங்கே இவ்வாறான சந்தர்ப்பங்கள் இன்மையால் எவ்வண்ணம் வெளிவருவது எனத் தெரியாமல் வழிதேடி அலைகின்றனர் போலும்.

உண்மையில் யுத்தத்தால் வடுப்பட்ட எமது சமூகம் இங்கே இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது இவர்களுக்கு நீங்கள் நிச்சயமாக வழிசமைத்து

வாழ்வியலில் அவர்களுக்கான ஒரு பலத்தினை உருவாக்கிக் கொடுத்திட முனையுங்கள் சமூக நற்பணிகளின் மூலம் சமுதாயத்திற்கு வெளியாகுங்கள் போலி அரசியற்கருத்துக்களால் முனைப்புப்பெற பிரபலம் பெற முயலாதீர்கள் இது உங்களுக்கு வெற்றியாக இருக்கலாம் மக்களுக்கு, நாட்டுக்கு அது தோல்வியே.

இது தனியே தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல சிங்கள முஸ்லீம் மக்களுக்கும் ஆனதுதான்.

தேசியப் பிரச்சினையின் புரிதல்களில் மாறுதல்கள் கொண்டுவதற்கு அடிப்படை அரசியல் அமைப்பு மாறித்தான் ஆகவேண்டும் இதுவரை பரிந்துரைக்கப்பட்டவைகள் அவற்றின் திருத்தங்கள் தொடர்பில் இன்னமும் இறுதித் தீர்மானங்கள் எட்டப்படவில்லை என்பதால் எதைப்பற்றியும் விமர்சிப்பதற்கு எமக்கான தரவுகள் போதாது இருப்பினும் இலங்கையில் மதத்திற்கு முன்னுரிமை அல்லது இது ஒரு பௌத்த வாத நாடு என்ற கருத்துடைய சரத்துக்கள் முழுமையாக நீக்கிடப்படல் வேண்டும்.

மதம் இனம் சாதி போன்ற கட்புலனாக கருத்துருக்களை அடியோடு அகற்றிட வேண்டும். இனிவரும் ஏகாதிபத்தியம் என்பது பொருளுடை வாதத்தின் கீழேயே நிகழ்த்தப்படும். தெளிந்திடாத வரைக்கும் இலங்கைத்தீவில் அபிவிருத்தி என்பது கானல் நீரே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here