துணுக்காயில் மோசடியில் ஈடுபட்டவர் தற்போது கல்விப் பணிப்பாளர்

“மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஒருவர், கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கல்வியமைச்சு தெளிவுபடுத்த வேண்டும்” என, ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின், வெள்ளிக்கிழமை (02) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது மடு கல்வி வலயத்துக்கு கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவர், முன்னர் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளராகவிருந்து அவருக்கெதிரான மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவராவார்.

“இவ்விசாரணை, இலங்கை கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர் ஒருவரின் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிதி மோசடி தொடர்பாக விசாரணைக் குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன? விசாரணைக் குழுவால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் என்ன? என்பது தொடர்பாக இதுவரை வடமாகாண கல்வியமைச்சால் வெளியிடப்படாத நிலையில் அவர் மடு வலயத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ஏறத்தாழ 4 இலட்சம் ரூபாய் பணமாக செலுத்தி பற்றுச்சீட்டு வழங்கிய பின்னரே நியமனம் வழங்கப்பட்டதாக அறிகின்றோம்.

“எனவே, அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் விசாரணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு எடுத்த நடவடிக்கை தொடர்பாக வடமாகாண கல்விச் சமூகத்துக்கு வடமாகாண கல்வியமைச்சு தெளிவுபடுத்த வேண்டும்” என, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here