மாணவர்களுக்கு சரீர ரீதியில் தண்டனை வழங்கக் கூடாது : த. குருகுலராஜா

மாணவர்களுக்கு சரீர ரீதியில் தண்டனை வழங்கக் கூடாது என்று வட மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா தெரிவித்தார்.

வவுனியா, கனராயன் குளத்தைச் சேர்ந்த தர்மராசா ஜனார்த்தனன் (17) என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களுக்கு சரீர ரீதியில் தண்டனை வழங்கக் கூடாது என்ற தீர்மானத்தினை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 14 ஆயிரம் ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டுள்ளனர்.

மாணவனின் மரணம் தொடர்பில் சுட்டிக்காட்டப்படும் ஆசிரியர் மீது துறைசார் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் த. குருகுலராஜா தெரிவித்தார்.

இதேவேளை தமது நண்பனின் இறப்புக்கு ஆசிரியரே காரணம் என்று குற்றஞ்சாட்டிய சகமாணவர்கள் அவரைப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

அவரது இறுதிக் கிரியைகள் நேற்று முன் தினம் அம்பாள்குளம், குறிசுட்டான் குளத்தில் நடந்தபோதே மாணவர்கள் இதனைத் தெரிவித்திருந்தனர்.

‘சிரமதானம் ஒன்றின் போது இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிணக்குக் காரணமாக சக மாணவர்களின் முன்பாகத் தண்டனை வழங்கப்பட்டது.

அதனால் மனமுடைந்தே இவ்வாறான முடிவு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தண்டித்த விதமே இதற்குக் காரணம்.

இந்த ஆசிரியர் ஏற்கனவே ஒரு மாணவனுக்கு அறைந்து மாணவனுக்குக் காது கேட்காத நிலைமையும் காணப்படுகின்றது.

இந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். வேறு பாடசாலைகளிலும் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் மாணவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ‘ஆசிரியர் தண்டித்தமைக்கும் மாணவன் உயிரிழந்தமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

நாங்களும் படிக்கும் போது தவறு விட்டால் தண்டிக்கப்பட்டோம். அவ்வாறு கற்றே இந்த நிலைமைக்கு வந்துள்ளோம்.

மாணவர்கள் தவறுகள் விடும்போது தண்டிக்க வேண்டும். அப்போதே அவர்கள் ஒழுக்கமானவர்களாக உயர்வார்கள்.

கனகராயன்குளம் பாடசாலை தற்போது கல்வியில் உயர்கின்றது. முறையற்ற வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு மாணவர்களின் மனங்களைக் கெடுக்கக் கூடாது.

அத்தோடு பாடசாலையின் பெயரையும் கெடுக்கக் கூடாது என பாடசாலையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here