லண்டன் பயங்கரவாதத் தாக்குதல் : 12 பேர் கைது

பிரித்தானியாவில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என லண்டன் மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டன் பிரிட்ஜ் மற்றும் பரோக் சந்தை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் லண்டன், பாரக்கிங் பகுதியில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை சிலர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், வீட்டிற்குத் திரும்பி வராத உறவினர்கள் தொடர்பில் தகவல் தெரிவிப்பதற்கு அவசரகால தொலைபேசி எண்ணான 0800 0961 233 என்ற எண்ணுக்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் பிரித்தானிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி மற்றும் கடமையிலிருந்த பெருநகர பொலிஸ் அதிகாரி ஆகியோர் உள்ளிட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றதைத் தொடர்ந்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகத்திற்கிடமான முறையில் எவரையேனும் அவதானித்தாலோ, அல்லது ஆபத்தானது எனக் கருதினாலோ, 0800 789 321 என்ற பயங்கரவாத எதிர்ப்பு அவசர தொலை தொடர்பு இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், குறித்த தாக்குதலை பொதுமக்கள் பலர் புகைப்படம் எடுத்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி எடுத்திருந்தால் அந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை www.ukpoliceimageappeal.co.uk என்ற முகவரிக்கு பதிவேற்றம் செய்யுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here