வவுனியா மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள்

வவுனியாவில் 5 மாதங்களாக பூட்டப்பட்டிருந்த புதிய மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

195 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையத்தை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கடந்த 16 ஜனவரி 2017 வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.

13 பேருந்துகள் மாகாணங்களுக்கிடையிலான சேவையிலும், 21 பேருந்துகள் உள்ளூர் சேவையிலும் ஈடுபடத்தக்க வகையில் ஏ9 வீதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் நாளாந்தம் 100 பேருந்துகள் வந்து செல்லத்தக்க வகையில் நவீன முறையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.எனினும், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை சாரதி நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், மோதல்கள் காரணமாக புதிய மத்திய பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கடந்த 26 ஆம் திகதி வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 9 ஆவது அமர்வு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் மன்னாரில் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

கடந்த 15 ஆம் திகதி பல்வேறு சட்ட ஒழுங்குகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடமாகாணத்திற்குள் சேவை வழங்குகின்ற இலங்கை போக்குவரத்து சபையினருக்கு 40 வீதமும், தனியார் பேருந்துகளுக்கு 60 வீதமும் என்ற வகையில் பேருந்து சேவைகளை ஒழுங்கு செய்யவும், அதனடிப்படையில் இணைந்த நேர அட்டவணையை தயார் செய்து அமுல்படுத்துவது தொடர்பிலும் விசேட ஏற்பாடுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும்.,

அத்தோடு இவற்றை மீறுகின்ற தரப்பினருக்கு எதிராக 10,000 ரூபாய் தண்டப்பணம் அல்லது இரண்டுவருட சிறைத்தண்டனை வழங்கவும் அல்லது இரண்டு தண்டனைகளையும் அனுபவிக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் தலமைக்காரியாலயம் மற்றும் இ.போ.சபையின் வடபிராந்திய அலுவலகத்தின் வேண்டுகோளிற்கு இணங்க இ.போ.சபையின் பேருந்துகள் சனிக்கிழமை (03.06) முதல் புதிய பேருந்து நிலையத்தில் சேவையினை ஆரம்பித்துள்ளது.வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள இ.போ.ச சபையின் பேருந்து நிலையத்தில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புதிய மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன.

எனினும் தனியார் பேருந்துகள் புதிய மத்திய பேருந்து நிலையத்தில் சேவையினை வழங்கவில்லை என இ.போ.ச ஊழியர்களினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா தனியார் போக்குவரத்தின் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ராஜேஸ்வரனிடம் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினாவிய போது,

இ.போ.சபையின் அனைத்து பேரூந்துகளும் புதிய மத்திய பேருந்து நிலையத்திற்கு சொல்வதில்லை எனவும் இவ்விடயம் தொடர்பாக தற்போது வன்னி பிராந்திய பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் கூட்டம் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

எனினும் புதிய மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் எவரும் இல்லாமல் தற்போது கடமைக்காக புதிய பேருந்து நிலையத்திற்கு இ.போ.சபையின் பேருந்துகள் சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here