விக்னேஸ்வரனுக்கு நற்செய்தியை கூறிய பஸ்சநாயக்க நிலமே!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினை, படையினர் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் மக்களிடம் வழங்கப்படாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கு ஒத்துழைப்புடன் செயலாற்றலாம் என நற்செய்தி ஒன்றை கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு பஸ்சநாயக்க நிலமே தமக்கு வழங்கியிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

யாழ்.மாவட்டத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த கதிர்மாம் முருகன் ஆலயத்தின் தலைமை மத குரு பஸ்சநாயக்க நிலமே நேற்று மாலை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஷ்வரனை அவருடைய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.

இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் தடவை என நான் நினைக்கிறேன். அவருடைய வருகையை நாங்கள் வரவேற்கிறோம். அவருடைய சந்திப்பில் பல்வேறு விடயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம்.

குறிப்பாக புரிந்துணர்வே இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறேன். மேலும் கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு வடமாகாணத்திலிருந்து மக்கள் வருவதில்லை. அது எதற்காக என என்னிடம் கேட்டிருந்தார்.

அதற்கு நான் பதிலளிக்கையில் வடமாகாண மக்கள் பயத்தினாலேயே வருவதில்லை என்பதை மிக தெளிவாக கூறியிருக்கிறேன்.

மேலும் மக்களுக்குள்ள பயத்தை நீக்கினால் மக்கள் அங்கு தாரளமாக வருவார்கள் எனவே அதனை செய்யவேண்டும் என கேட்டிருக்கிறேன்.

அதேபோல் வடமாகாணத்தில் தற்போதுள்ள காணாமல்போனவர்கள் பிரச்சினை, படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளின் பிரச்சினை மற்றும், வேலையற்ற பிரச்சினை தொடர்பாக கூறியிருந்தேன்.

இந்நிலையில் அவர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி உரிய தரப்பினருக்கு எடுத்து கூறவேண்டும் எனவும் கேட்டிருக்கிறேன்.

இந்நிலையில் வடமாகாணத்தில் உள்ள இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கு ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கு தயாராக உள்ளதாக ஒரு நற் செய்தியை அவர் எமக்கு கூறியுள்ளார். என முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here