அரசியல்வாதிகளின் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட முள்ளிக்குளம் மக்கள்!

தமிழ் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து பொய் வாக்குறுதிகளையே மக்களுக்கு வழங்கியுள்ளதாக முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் முள்ளிக்குளம் மக்கள் சார்பில் முள்ளிக்குளத்தை சேர்ந்த அந்தோனி லம்பட் மற்றும் அந்தோனி குறூஸ் என்ற இருவர் யாழ்.ஊடக அமையத்தில் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளனர். மேலும் அந்தோனி லம்பட் கூறுகையில்,

மக்கள், கடந்த சித்திரை மாதம் 29ஆம் திகதி வாக்குறுதி வழங்கப்பட்ட போதும், கடந்த 35 நாட்களுக்கு மேலாக மக்கள் சொந்த நிலத்திற்கு செல்ல இயலாமல் வீதியில் கிடப்பதாகவும் கூறியுள்ளனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு முள்ளிக்குளம் கிராமத்திலிருந்து படையினரால் வெளியேற்றப்பட்டோம்.

அன்று தொடக்கம் இன்று வரையும் இடம்பெயர்ந்து மாற்று இடங்களில் வாழ்ந்து வருகின்றோம். இதற்கிடையில் பல போராட்டங்களை நடத்தியதுடன் ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கும் எமது பிரச்சினை தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தோம்.

எனினும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த பங்குனி மாதம் 23ஆம் திகதி முள்ளிக்குளம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் இணைந்து ஒரு போராட்டத்தை ஒழுங்கமைத்து தொடர்ச்சியாக சித்திரை மாதம் 29ஆம் திகதி வரை நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் 29ஆம் திகதி 38 ஆவது நாள் போராட்டத்தின்போது கடற்படை தளபதி மற்றும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள், கிறிஸ்தவ மத தலைவர்கள் கலந்து கொண்டு கடற்படையினரின் வசம் உள்ள காணிகள் 3 நாட்களுக்குள் மக்களிடம் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.

அது வரையில் முள்ளிக்குளம் பரலோக மாதா ஆலயத்தில் எம்மை தங்கியிருக்குமாறும் கேட்டு கொண்டனர். ஆனால் வாக்குறுதி வழங்கியபடி எதுவுமே நடக்கவில்லை.

சித்திரை மாதம் 29ம் திகதி தொடக்கம் இன்று வரையும் அண்ணளவாக 35 நாட்களுக்கு மேலாக முள்ளிக்குளம் பரலேக மாதா ஆலயத்திலேயே மக்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் அரசியல்வாதிகளும் மதத்தலைவர்களும் இணைந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அந்தோனி குறூஸ் கூறுகையில், முள்ளிக்குளத்திற்குள் சுமார் 8 குளங்கள் உள்ளது. அதேபோல் முடக்காம ஆறு என்ற ஆறும் உள்ளது.

அவையும் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் மக்கள் வாழ்வாதாரத்திற்கு பெரும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக முள்ளிக்குளம் மக்களுக்கு சமூர்த்தி நிவாரணம் கூட வழங்கப்படுவதில்லை.

இந்நிலையில் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஸ் கூறுகையில்,

கடந்த 2012ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் கத்தோலிக்க மத தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆகியோர் முள்ளிக்குளம் மக்களை சந்தித்து 3 மாதங்கள் கால அவகாசம் கேட்டிருந்தனர்.

அதனோடு கர்தினால் மல்கம் ரஞ்சித் தன்னை நம்புங்கள் என முள்ளிக்குளம் மக்களிடம் கேட்டிருந்தார். ஆனால் அவர் பின்னர் முள்ளிக்குளம் மக்களை பற்றி பேசுவதையே நிறுத்திவிட்டார்.

அவ்வாறான ஒரு செயலையே மன்னார் மறைமாவட்டமும் செய்கிறதா? என எண்ண தோன்றுகின்றது.

இதேவேளை கடந்த சித்திரை மாதம் 29ஆம் திகதி மக்கள் போராட்டத்தைக் கைவிட்டபோது கடற்படையினரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மதத்தலைவர்களும் இணைந்து முள்ளிக்குளம் மக்களை கடற்படை முகாமிற்குள் அழைத்துச் சென்று பேசியிருக்கிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தை ஆங்கிலத்தில் நடைபெற்றுள்ளது. எனவே மக்களுக்கும் அந்த விடயம் தெரியாது. எனவே மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதுடன், ஒரு வாரத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டத்தை நடத்தும் மனநிலையில் மக்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here