ஆட்சியை மாற்ற முஸ்லிம்கள் ஒன்றுபட்டதற்கான காரணம் இதுவே!

நல்லாட்சியில் திருகோணமலை மலையாவெளி பெரியகடை ஜும் ஆ பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் கட்டவிழ்த்தப்படுமானால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும் என கிழக்கு மாகாண சபை உறுப்பின் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.

கே லங்கா சொலூசன் நிறுவனத்தின் அறிமுகமும் இப்தார் நிகழ்வும் ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

திருகோணமலை, மலையாவெளி, பெரியகடை ஜும் ஆ பள்ளிவாசல் மீதான தாக்குதல் என்பது சிறுபான்மை சமூகங்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்குள் பல குழப்பங்களை ஏற்படுத்தக் கூடிய விடயங்கள் என்ற சந்தேகம் எங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெற்றோல் குண்டு வீசப்பட்ட இடமானது முஸ்லிம்களின் கன்னியமான ஒரு மதஸ்தலம். இதில் கை வைத்தால் எந்த அளவு விபரீதம் ஏற்படும் என்பதை கடந்த அரசாங்கத்தில் பார்த்திருந்தோம்.

முஸ்லிம்களின் பள்ளிவாசல் மற்றும் அடிப்படை விடயங்களில் கை வைத்ததன் காரணத்தால்தான் மகிந்த அணியை மாற்றுகின்ற விடயத்தில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டார்கள்.

வடக்கு, கிழக்கு பகுதியில் புலிகள் காலத்தில் முஸ்லிம்கள் பட்ட கஷ்டங்களும்இன்னல்களும் நமக்கு தெரியும்.

இவ்வாறு இன்னல்களை அடைந்த முஸ்லிம்கள் ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அபிவிருத்திகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் முஸ்லிம்களின் அடிப்படையில் கை வைத்தமையால் ராஜபக்ஷவை தூக்கி எறிகின்ற அளவிற்கு ஒன்றுபட்டார்கள்.

இந்த நல்லாட்சியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் கட்டவிழ்த்தப்பட்டு அந்த தாக்குதலுக்குரிய சூத்திரதாரிகள் அடையாளம் காணப்படாமல் விடப்படுவதென்பதும், சட்டம் அதனுடைய செயற்பாட்டை செய்யவிடாமல் தடுக்கப்படுகின்ற விடயங்கள் என்பனவும் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதற்கு எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை எனவும் அவர் தொடர்ந்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here