சம்பந்தன் மீது மனோ கடும் கோபம்

நாடாளுமன்றில் உண்மையான எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் இல்லை. ஆனால்,அவர் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதன்மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனி நாட்டுக் கோரிக்கையை கைவிட்டுவிட்டது என்ற செய்தி சிங்கள மக்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.சிங்கள தொலைகாட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்;

உண்மையான எதிர்கட்சித் தலைவராக நாம் சம்பந்தனை ஏற்க முடியாது.நாம் உண்மையை ஏற்றே ஆக வேண்டும்.அவர் முழு நாட்டின் பிரச்சினைகளையும் நாடாளுமன்றில் பேசுவதில்லை.வடக்கு-கிழக்கு பிரச்சினையை மட்டும்தான் பேசுகின்றார்.அரசியல் காரணங்களுக்காக அவர் இந்தப் பதவியை வகிக்கின்றார்.

முழு நாட்டையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்ற மஹிந்த அணியின் நிலைப்பாட்டுடன் நான் இருக்கின்றேன்.ஆனால்,இந்தப் பதவியை அவர் ஏற்றதன்மூலம் ஒரு நல்ல செய்தியை இந்த நாட்டு சிங்கள மக்களுக்குக் கூறியுள்ளார்.

நாம் இந்த தேசத்தின் ஒரு பங்காளியாக மாறிவிட்டோம் என்பதும் தனி நாட்டுக் கோரிக்கையை கைவிட்டுவிட்டோம் என்பதும்தான் அந்தச் செய்தியாகும்.உண்மையில் இது அவசியமான செய்தி.சிங்கள மக்கள் மத்தியில் இருந்த சந்தேகத்தை-தப்பெண்ணத்தை நீக்குவதற்கு இந்தச் செய்தி உதவியுள்ளது என்றே கூற வேண்டும்.

அவர் எதிர்கட்சித் தலைவராகப் பதவியேற்று முழு நாட்டையும் பிரதிநித்துவப்படுத்தவில்லை என்பது இரண்டாவது பிரச்சினையாகும்.அமிர்தலிங்க எதிர்கட்சித் தலைவராக இருந்து பேசிய அளவுக்குக்கூட சம்பந்தன் பேசுவதில்லை.

இருந்தாலும்,தனி நாட்டுக் கொள்கை கைவிடப்பட்டுள்ளது என்ற செய்தி எல்லாவற்றையும்விட முக்கியமானதாகும்.இன்று தெற்கில் உள்ள கடும்போக்குவாதிகள் அரசியல் தீர்வுக்கு எதிராக-புதிய அரசமைப்புக்கு எதிராகப் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டை இரண்டாகப் பிரித்து வடக்கு-கிழக்கை தமிழர்களுக்கு வழங்கப் போவதாக இவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.தமிழீழத்தை அரசு தமிழருக்கு வழங்கப் போகின்றது என்று கூறி வருகின்றனர்.இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் சம்பந்தனின் எதிர்கட்சிப் பதவி விடுத்துள்ள செய்தி மிக முக்கியமானதாகும்.-என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here