செத்து மடிவதைப் பார்த்துமா திருந்தவில்லை? இனியாவது திருந்துவோம்!

என்றோ இருந்த நிலை இன்று இருக்கின்றதா? காலார நடை போட்டால் மனதில் உள்ள குறைகளையும் தானாக மறக்கவைக்கும் சூழல் எப்போதோ இருந்தது என்பதனை இப்போது பலர் அறிவது இல்லை.

நாகரீக வளர்ச்சியில் அப்போது விளைநிலங்களும், இயற்கை தந்த அதிசயமும் இன்று கண்களுக்கு விருந்தளிக்கவில்லை. வானுயர்ந்து நிற்கின்றது சீமெந்துக் கட்டடங்கள்.

சிறப்பாகத் தான் அமைக்கப்பட்டுள்ளன அவை. அத்தோடு அங்கே வரவேற்புக்கான ஓரிரு மரங்கள் மட்டும் மாசுபட்ட காற்றைக்கண்டு அச்சத்தில், வெறுப்பில் தலையசைத்தாடுகின்றன.

கார் மேகங்களை மறைத்து எழுப்பப்பட்டுள்ள மாடமாளிகைகளைத் தாண்டி மழை துளிகள் மண்ணில் விழ வேண்டும் என்றால், அவை மேகத்தின் ஆத்திரக் கண்ணீர்த் துளிகளாகவே இருக்கவேண்டும்.

புகையும் அத்தோடு சேர்ந்து புகை தந்த நாற்றமும் நடந்து போகும் என் வெள்ளைச் சட்டைக்கு என் அனுமதியின்றியே வண்ணம் அடித்து விட்டன.

அதிவேகப்பாதை வந்தது தொடக்கம் மனிதரும் அதி வேகமாகவே நடந்து செல்கின்றனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமலே கடந்து செல்கின்றனர். இதில் சூழலைப் பார்க்க ஏது நேரம்.

அதற்காக மீண்டும் ஒரு காலம், அது வானம் நீலமாகவும், சுற்றிப்பரந்த காடு பச்சையாகவும், சூரியன் சுட்டெரித்துக் கொல்லாமலும், மழை பொய்க்காது பருவம் மாறாமல் பொழியவும், மண் வரண்டு வறட்சி தராமலும் இருக்க.,

மீண்டும் கற்காலம் மட்டுமே வர வேண்டும் என எதிர்பார்ப்பது என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனமே. அதற்கு முதல் மனிதன் மனமுள்ளவராக மாறவேண்டும்.

அதற்காக மாற்றங்கள் ஏற்படுவதை குற்றம் சொல்ல வரவில்லை. சூழல் சமநிலையைக் கெடுத்து நமக்கு நாமே கொள்ளி வைத்துக் கொள்ள வேண்டாமே என்பதே என் வாதம்.

10 மரங்களை வெட்டும்போது 2 மரத்தையாவது நட்டுவிடலாமே? செய்யத் தவறுகின்றது மனித செயற்பாடுகள். காரணம் நாகரீக கட்டடத்தில் உள்ள சொகுசு இயற்கையில் கிடைப்பதில்லை என்ற சிந்தை உள்ளது.

ஆனால் பண்டைய மக்கள் அவ்வாறு இருக்கவில்லை சூழலை நன்றாகவே புரிந்திருந்தனர். ஐம்பூதங்களின் முக்கியத்துவத்தை நன்றாகவே அறிந்திருந்தனர்.

“மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல…,”

என்கின்றது புறநானூற்றில் ஒரு பாடல். இது அப்போதைய மக்கள் சூழலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றது. அதற்காக சூழல் புகழ் பாட தேவையில்லை அழிக்காமல் விட்டு விடலாமே அதன் போக்கிற்கு.

இன்று உலக சுற்று சூழல் தினம். ஆண்டுதோறும் யூன் 5ஆம் திகதி சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

என்றாலும் அதனால் பாரிய அளவு மாற்றங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் இருந்த நிலை மாறி சூழல் சமநிலை குறைவடைந்து செல்கின்றதே தவிர முன்னேற்றத்தினை அறிய முடிவதில்லை.

சூழல் மனிதருக்கு எமனாக மாறி வருவதனை அறிந்தும், அறியாதது போல் இருப்பது வேதனைத் தரும் விடயம்.

ஒவ்வோர் தனிமனிதனும் சூழல் இல்லையேன் வாழ்க்கையும் இல்லை, என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். ஓர் மரம் ஓராயிரம் உயிர்களை வாழ வைக்கும் என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைய நாளில் முடிந்தால், சூழல் முக்கியம் என நினைத்து ஒரு மரத்தையாவது வாழ்நாளில் நட்டு விடுவோம். இனி வரும் சந்ததியினருக்கு இந்த உலகை அப்படியே கொடுத்து விட்டுப் போவோம்.

தம் சுய நலத்திற்காக பூமித்தாயை சிதைத்து விட வேண்டாமே…, சுற்றுச் சூழலைக் காப்பது ஒவ்வோர் தனி மனிதனதும் கடமை. உணர்ந்தால் 50 வருடங்களில் பூமித்தாய் மனிதரை ஆதரிப்பாள்.

இல்லை என்றால் அடுத்த எம் சந்ததிக்கு இயந்திர இதயங்களைப் பொருத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் அழிந்து போவது சூழல் மட்டுமல்ல மனிதர்களும், அவர்களது மனங்களுமே.

இப்போது இயற்கை வடிவில் மனிதர்கள் செத்து மடிந்து கொண்டிருப்பதை பார்த்துமா இன்னும் திருந்தவில்லை?. வெள்ளம், மண்சரிவு, வறட்சி, பசி,பட்டினி, பொய்க்கும் பருவம் இப்படி எத்தனை எத்தனையோ இயற்கை மரண வடிவங்கள்.

ஒரு காலத்தில் 100ஐத் தாண்டி வாழ்ந்த மனித இனம், படிப்படியாக தம் ஆயுளை குறைத்துக் கொண்டே வருகின்றான்.

இவை அனைத்திற்கும் ஒரே காரணம் மனிதர் சுற்றுச் சூழலுக்கு எதிரியாகின்றதால், சூழல் பதில் அளிக்கின்றது. இதற்கு நாம் செய்ய வேண்டியது, தெளிவாகத் தெரியும், காப்போம் சுற்றுச் சூழலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here