காணாமல் போனோர் அலுவலகத்தை நிறுவும் சட்டத்தில் திருத்தம்!

காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக் காலை நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்தத் திருத்தம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் எனவும், அதன் பின்னர் விரைவில் காணாமல்போனோர் அலுவலகம் நிறுவப்படக்கூடும் எனவும் இதனுடன் தொடர்புடைய தரப்பினர் தெரிவித்தனர்.

காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டவரைபு நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன்போது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) முன்வைத்த திருத்தம் உள்ளடக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் திருத்தத்தை உள்ளடக்கிய திருத்தச்சட்டம் அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திருத்தச்சட்டம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நாடாளுமன்றம் அங்கீகரித்த பின்னர், வர்த்தமானியில் சட்டம் பிரசுரிக்கப்படும். அதன் பின்னர் காணாமல்போனோருக்கான அலுவலகம் நிறுவப்படும் என்றும் கூறப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் அவர்களின் உறவினர்களால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, காணாமல்போனோர் அலுவலகம் விரைவில் நிறுவப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் நீதியான விசாரணை நடைபெற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேச சமூகமும் அரசிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here