சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் இன அழிப்பிற்கு

சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் 94ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த பிரேரணையை சபைக்கு கொண்டு வந்தார்.

பிரேரணையை சபைக்கு கொண்டு வந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

எண்ணிக்கையில் சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை இன்றும் அதிகாலையில் நுகேகொடை பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய வர்த்தக நிலையம் தாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்கள இனத்தை சேர்ந்த சிலர் இவ்வாறான தாக்குதல்களை நடத்துகிறார்கள். எனவே அரசாங்கம் இவ்வாறான தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை தண்டித்து பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஒரு இன அழிப்பிற்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது என கூறினார்.

இதனையடுத்து பிரேரணையை வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ஜயதிலக ஆமோதித்த நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here