சீரான போக்குவரத்து வசதிகளின்மையால் அவதியுறும் முல்லைத்தீவு மக்கள்

முல்லைத்தீவு கோட்டை கட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளம் போன்ற பகுதிகளில் சீரான போக்குவரத்து வசதிகள் இன்மையால் தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அங்கு வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள அமைதிபுரம், அம்பலப்பெருமாள் குளம், கோட்டைகட்டியகுளம், தென்னியங்குளம், உயிலங்குளம், வேட்டையடைப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கான பிரதான வீதியாக காணப்படும் துணுக்காய், அம்பலப்பெருமாள் சந்திவரைக்குமான வீதி கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் மக்களின் போக்குவரத்து தேவைகளுக்கு ஒரு பேருந்து மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அது தமது தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வின் முதன் முதலில் குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்ட இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் இன்று வரையும் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் தமக்கான அடிப்படை வசதிகளை பெற்றுத் தரக்கோரி் உரிய அதிகாரிகளிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தமது மருத்துவ தேவைகள் மற்றும் மேலதிக கல்வி சார் வசதிகளை பெற்றுக்கொள்ள மிக தொலைவில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் தமக்கான போக்குவரத்து வசதிகளை உரிய முறையில் பெற்றுத் தருவதோடு வீதியையும் புனரமைத்து தருமாறு மக்கள் இதன்போது மேலும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here