மூதூர் சிறுமிகள் துஷ்பிரயோகம் – தொடரும் போராட்டங்கள்

மூதூர் – மல்லிகைத்தீவில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், உரிய தீர்வை பெற்றுத்தரக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கல்குடா கல்வி வலயத்திற்குற்பட்ட வாகரைக் கோட்டத்திலுள்ள பால்சேனை அரசினர் கலவன் பாடசாலை மற்றும் வம்மிவெட்டவான் ஆகிய பாடசாலை மாணவர்கள் இணைந்து இன்று (06) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

வாகரை பால்சேனை மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதிக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பால்சேனை பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் முன்வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் உரிய நீதியைப் பெற்று கொடுக்கவேண்டும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராக வேண்டாம், அரச தலையீடு வேண்டாம்’ போன்ற கோசங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதி உட்சபட்ச தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனக்கோரிய மகஜர் ஒன்றையும் வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மாணவர்களினால் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, இன்றைய தினம் ஈச்சிலம்பற்று பகுதியிலும் மூன்று சிறுமிகளுக்கு நீதிகோரிய பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here