யாழில் கஞ்சா கடத்த முயன்ற இளைஞர் கைது

யாழ். சித்தான்கேணி பகுதியில் 10.156 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இளைஞரொருவரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கஞ்சா, சித்தன்கேணி வைத்தியசாலைக்கு அருகாமையில் முச்சக்கரவண்டியொன்றிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இளைஞர் 10.156 கிலோகிராம் நிறையுடைய கேரளா கஞ்சா பொதியினை சித்தான்கேணி வைத்தியசாலைக்கு அருகாமையில் நின்ற முச்சக்கரவண்டி சாரதியுடன் யாழிற்கு கொண்டு செல்வதற்காக முயற்சித்த போதே பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த பாலேந்திரன் சிவரஞ்சன் என்ற 28 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் கைது செய்யப்பட்ட வேளையில், மற்றைய நபர் தப்பி ஓடியுள்ளதாகவும், முச்சக்கரவண்டி மற்றும் கஞ்சா பொதி என்பவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறித்த இளைஞரை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here