வவுனியா பாடசாலை மாணவன் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்?

வவுனியா – கனகராயன்குளம் பாடசாலை உயர்தர மாணவன் தர்மராசா ஜனார்த்தனன் ஆசிரியர் தாக்கியமையால் மனமுடைந்து கடந்த 31 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று பாடசாலை மாணவர்கள் குறித்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்படவேண்டும் மற்றும் அதிபர் இடமாற்றம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவர்களுக்கும், பெற்றோருக்கு விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளதுடன் பாடசாலை முன்பாக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவன் விசமருந்திய நிலையில் மாணவனின் வீட்டிற்கு அருகாமையில் குடியிருந்த ஆசிரியரிடம் மாணவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு உதவி கோரியபோதிலும் குறிப்பிட்ட ஆசிரியர் உதவிசெய்ய மறுத்துள்ளார்.

அவ்வாறு ஒரு ஆசிரியர் உதவி செய்யாமைக்கு என்ன காரணம்? என மரணமடைந்த மாணவனின் கிராமமான அம்பாள்நகர், குறிசுட்டகுளம் கிராமத்தில் விசாரித்த போது ஆசிரியர் பெண்கள் பலவீனம் உள்ளவர் என்றும் கிராமத்தில் பெண் பிள்ளைகளை மாத்திரம் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்வதாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.

கடந்த காலங்களில் இந்த ஆசிரியர் ஆண் மாணவர்கள் மீதே தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட ஆசிரியரை காப்பாற்றும் நோக்கத்துடன் பாடசாலை அதிபர் செயற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.அத்துடன், சம்பவம் நடைபெற்ற தினமான அன்று பாடசாலையை சுத்தப்படுத்துமாறு நான்கு மாணவிகளை இறந்த மாணவத்தலைவன் உத்தரவிட்டதாகவும் அதனைப்பொறுக்க முடியாத ஆசிரியர் சந்தர்ப்பம் பார்த்து மாணவனை தாக்கியதாகவும் கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற பாடசாலை வளாகத்தில் இரண்டு கண்காணிப்பு கெமறாக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அந்த கெமறாவினால் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை பரிசோதனை செய்யுமிடத்து உண்மைகளை வெளிக்கொணர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் ஆசிரியர் மாணவன் ஒருவரை கன்னத்தில் அறைந்தபோது ஆத்திரத்தில் அறை வாங்கிய மாணவன் பூந்தொட்டி ஒன்றை தூக்கிபோட்டு உடைத்து விட்டு சென்றதாகவும் அந்த செயற்பாடு கண்காணிப்பு கெமறாவில் பதிவாகிய நிலையில் மாணவன் பூந்தொட்டியை போட்டு உடைக்கும் வீடியோ பதிவை மாத்திரம் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு அனுப்பிய அதிபர் மாணவனை ஒரு மாதத்திற்கு பாடசாலையிலிருந்து இடைநிறுத்தி வைத்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும், பாடசாலை சமூகத்தின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு விரிவான விசாரணைகளை நடத்தவேண்டும் என்பதோடு பாடசாலைக்கு அனுப்பும் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here