அநுராதபுரத்தில் விசேட பாதுகாப்பு

இலங்கைக்கு பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளான பொசொன் தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மிஹிந்து தேரர் மூலமாக பௌத்த தர்மம் குறித்த செய்தி இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு, மிஹிந்தலைக் காட்டில் வேட்டைக்குச் சென்றிருந்த நிலையில் தேவானம்பியதிஸ்ஸ மன்னனுக்கு அச்செய்தி எத்திவைக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் ஒரு பொசொன் பௌர்ணமி தினமாகும்.

இதன் காரணமாக இலங்கைக்கு பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்ட பொசொன் பௌர்ணமி தினத்தில் மிஹிந்து தேரரின் முதல் போதனை இடம்பெற்ற மிஹிந்தலை மற்றும் அன்றைய ராஜதானியான அநுராதபுரத்தை முன்னிறுத்தி பௌத்தர்களின் கொண்டாட்ட வைபவங்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

இந்நிலையில் இன்று ஆரம்பமாகவுள்ள 2017ம் வருடத்துக்கான பொசொன் வைபவங்களை முன்னிட்டு அநுராதபுரத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கென சுமார் மூவாயிரம் பொலிசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களைக் கண்காணிக்கும் மற்றும் பாதுகாப்பு வியூகங்களை வகுக்கும் பணிகளில் பத்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக ஆயிரம் பேர் கொண்ட விசேட அதிரடிப்படையினரும் அநுராதபுர நகரின் பாதுகாப்பு தேவைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

நகருக்குள் வரும் வாகனங்களை சோதனையிடுவதற்கான பாதுகாப்பு சாவடிகளும் பல இடங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அநுராதபுரம் பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here