“நீந்திக்கடந்த நெருப்பாறு” புத்தக வெளியீட்டு நிகழ்விற்கு ஆதரவளிப்போம்!

அனைத்து பேதங்களையும் கடந்து நீந்திக்கடந்த நெருப்பாறு புத்தக வெளியீட்டு நிகழ்விற்கு ஆதரவளிப்போம்!
எமது மண்ணில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொடூர இனவழிப்பின் சாட்சியங்களாக வெளிவரவிருக்கும் ‘பூநகரியில் இருந்து புதுமாத்தளன் வரை என்ற நீந்திக் கடந்த நெருப்பாறு என்னும் இப் புத்தக வெளியீட்டு நிகழ்விற்கு அனைத்து பேதங்களையும்
கடந்து ஆதரவளிப்பது எமது வரலாற்று கடமைகளில் ஒன்று என கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அபிவிருத்தி அமையத்தின் தலைவர் ப.குமாரசிங்கம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர் தேசத்தின் மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன் எழுதிய ‘பூநகரியில் இருந்து புதுமாத்தளன் வரை என்ற நீந்திக் கடந்த நெருப்பாறு’ எனும் ஆவணப்பதிவின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 10.06.2017 சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  இவ் வெளியீட்டு நிகழ்வு தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எமது வரலாற்று பதிவுகளை உண்மையாக மட்டுமன்றி தொடர்புபட்ட நிகழ்வுகளில் நேரடியாக களத்தில் நின்ற நூலாசிரியர் என்ற வகையில் நா.யோகேந்திரநாதன் அவர்களின் பதிவுகள் வரலாற்று தேவையாக காணப்படுகின்றது. உள்ளதை உள்ளவாறே தனது எழுத்துக்களில் வலிமையாக வெளிப்படுத்தக்கூடிய வல்லமை மிகுந்த ஒருவரின் கடின உழைப்பிற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும்.
அதுமட்டுமல்லாது போரை நேரடியாக தரிசித்தவரின் இவ் யதார்த்தமான படைப்புக்களே எதிர்கால சந்ததியினருக்கும் எமது விடுதலைப்பயணத்தின் வீச்சிற்கும் பலம் சேர்ப்பதாய் இருக்கும். இன்று உண்மைக்கு புறம்பாக திரிபுபடுத்தப்பட்டு ஒரு சிலரால் தமது சுயநலன் கருதி தமிழ்த்தேசிய சிந்தனையையும் வரலாற்று பதிவுகளையும் அழிக்க கங்கனம் கட்டிச்செயற்படும் பேரினவாத சக்திகளுடன் இணைந்து அவர்களை மகிழ்வித்து வரலாற்று அழிப்பிற்கு துணை போகும் திட்டமிடப்பட்ட பல வெளியீடுகளுக்கு மத்தியில் இவ்வாறானதொரு புரட்சிகர சிந்தனை கொண்டவரின் எழுத்துக்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியது முக்கியமானதாகும். எனவே இவ் வரலாற்று கடமையை நிறைவேற்ற நாம் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என தனது குறிப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here