பாலப்பழமும் கதிரவெளியில் வசிக்கும் கந்தையா சித்திரவேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேசத்தின் பல பகுதிகளில் தற்பொழுது பாலப்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகரை கட்டுமுறிவு என்பது மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் மீன்பிடி, தேன் எடுத்தல், பாலப்பழம் பறித்து விற்றல் போன்ற இயற்கையை நம்பி வாழ்கின்றவர்களாக காணப்படுகின்றார்கள்.

இவ்வாறு, பாலப்பழத்தை விற்று அதனூடாக தனது வாழ்க்கைச் செலவை நடத்தும், கதிரவெளியில் வசிக்கும் ஏழை முதியவர் கந்தையா சித்திரவேல் இது குறித்து தெரிவிக்கையில்,பாலப்பழம் சீசன் காலத்தில் காலையில் 6 மணிக்கு ஒரு தண்ணீர் போத்தலுடன் பாலக்காட்டுக்குள் புகுந்தால் கொண்டு செல்லும் பெட்டிகள் முழுக்க நிரப்பிக் கொண்டு வந்து யாரும் கேட்டால் விற்போம் .

ஒரு மூன்று கொத்து பழம் பறிக்க வேண்டும் என்றால் வயது முதிர்ந்த காலத்தில் என்ன செய்கின்றோம் என்றும் பாராமல் பெரிய பாலமரங்களில் ஏறி ஒரு இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் பறித்தால்தான் குறித்த அளவு பழங்கள் வரும் அதனைக் கொண்டு ஒரு 220 ரூபாவிற்கு விற்போம்.ஆனால் அதனை வாங்கிச் செல்லும் முஸ்லிம் வியாபாரிகள் 960 ரூபாவிற்கு மேல் காத்தான்குடி, கல்முனை, ஏறாவூர், ஓட்டமாவடி இப்படி பல இடங்களில் விற்பனை செய்கின்றார்கள் என கேள்வியுற்றோம்.பாலப்பழம் சீசனும் முடிந்தால் இயற்கையில் கிடைக்கும் இந்த ஒரு சிறிய வருமானமும் எமக்கு இல்லை.

பாலப்பழம் சீசன் முடிந்தால் வீரப்பழம் பழுக்கத் தொடங்கிவிடும் பாலப்பழத்துக்கு பின் வீரப்பழம் பறிக்கச் சென்றிடுவோம்.இயற்கையாகவே வாகரை காட்டுப் பகுதிகளில் கிடைக்கும் பாலப்பழம், வீரப் பழங்களை நம்பியே என்னைப் போன்ற பல குடும்பங்கள் யானை மற்றும் பாம்பு, கரடி போன்ற காட்டு மிருகங்களின் எச்சரிக்கைகளில் இருந்தும் வெயில் என்றும் பாராமல் ஒரு பிடி சோறு கிடைக்க வேண்டும் என நினைத்து பெண்கள், சிறுவர்கள் என பாராமல் மரங்கள் ஏறி கஸ்டப்பட்டு அதை விலைக்கு விற்க வேண்டிய நிலையுள்ளது என தெரிவித்தார்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here